இந்த மாத ஆரம்பத்தில் ( மே 6 ) நடைபெற்ற லெபனான் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பிரதமர் சாட் ஹரிரியின் அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் மத்தியில் உள்ள கடுமையான வெறுப்பை வெளிக்காட்டின. அண்மைய வருடங்களில், லெபனான் பெருவாரியான நிருவாக மற்றும் பிராந்திய சவால்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது. அவற்றை சமாளிப்பதற்கான ஆற்றல் இல்லாததாகவே அரசாங்கம் பெருமளவுக்கு இருந்துவருகிறது.

 

கழிவு அகற்றல் முகாமைத்துவம் சீர்கலைந்திருந்ததை ஆட்சேபித்து தலைநகர் பெய்ரூத்திலும் வேறு பகுதிகளிலும் மக்கள்  ஆர்ப்பாட்ங்களில் இறங்கினர்.கடுமையான மின்சாரப் பற்றாக்குறையும் நிலவுகிறது. பொருளாதாரம் சிதைந்துபோய்க் கிடக்கிறது.இவற்றுக்கு மேலதிகமாக கடந்த ஏழு வருடங்களுக்கும் அதிகமான காலமாக லெபனானுக்குள் வந்துகுவிகின்ற சிரிய அகதிகளால் பொது உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் பயங்கரவாத அமைப்பு என்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் லெபனானின் மிகவும் பலம்பொருந்திய ஷியா இயக்கமான ஹிஸ்புல்லா சிரியாவின் உள்நாட்டுப் போரில் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில் பிராந்திய பதற்றமும்  அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.லெபனான் நீண்டகாலமாக உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த ஒரு நாடு. அந்த உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் நாட்டின் அரசியல் சமூகம் - ஹிஸ்பால்லா இயக்கத்தின் தலைமையிலான ஈரானிய சார்பு ஷியா முகாம் என்றும் சவூதி அரேபியாவுடனும் மேற்குலகுடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்ட  பிரதமர் ஹரிரி தலைமையிலான  சுன்னி முகாம் என்றும் - பெரும்பாலும் இரண்டாகப் பிளவுபட்டுக்கிடக்கிறது. 

ஹிஸ்புல்லா கிறிஸ்தவக் கட்சிகளுடன் கைகோர்த்திருக்கிறது.தேர்தல் பிரசாரங்களின்போது இரு தரப்பினராலும் மதப் பிரிவுகளுக்கிடையிலான குரோத உணர்வுகள் தூண்டிவிடப்பட்டன.ஹிஸ்புல்லாவின் ஈரான் தொடர்புகள் காரணமாக லெபனானின் அரபு அடையாளம் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது என்று  ஹரிரி கூறிய அதேவேளை, ஹஸ்புல்லா தலைமையிலான கட்சிகள் அரசாங்கத்தை அதன்குறைபாடுகளுக்காகக் கடுமையாக தாக்கியதுடன் சவூதி அரேபியாவையும் மேற்குலகையும் இலக்கு வைத்து தங்களின் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன.

அதன் விளைவாக ஹரிரியின் ' எதிர்காலத்துக்கான இயக்கம் ' என்ற கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 128 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அக்கட்சியின் பலம் 33  இலிருந்து  21 ஆகக் குறைந்துவிட்டது. முன்னைய பாராளுமன்றத்தில் கொண்டிருந்த 13 ஆசனங்களையும் ஹிஸ்புல்லாவினால் புதிய பாராளுமன்றத்திலும் தக்கவைக்கக்கூடியாக இருந்த அதேவேளை அதன் நேச அணிக்கட்சிகள் அவற்றின் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றன. ஜனாதிபதி மிச்சேல் ஓவனின் சுதந்திர தேசபக்த இயக்கம் ஆறு ஆசனங்களைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அத்துடன் ஹிஸபுல்லாவுடன் தொடர்புகளைக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியிருக்கும் ஆசனங்கள் இரண்டுமடங்காக ( 8 ) அதிகரித்திருக்கின்றன.அதனால் பாராளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைக் கொண்ட கூட்டணியாக ஹிஸ்புல்லா தலைமையிலான கட்சிகளே விளங்குகின்றன.

லெபனான் அதன் மதப்பிரிவுகள் மத்தியில் ஆட்சியதிகார பதவிகளையும் நிறுவனங்களையும் விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கின்ற தனித்தன்மைவாய்ந்த ஒழுங்குமுறையைக் கொண்டிருக்கிறது. பிரதமர் சுன்னி முஸ்லிமாக இருக்கவேண்டும். ஜனாதிபதி கிறிஸ்தவராக இருக்கவேண்டும். பாராளுமன்ற சபாநாயகர் ஷியா முஸ்லிமாக இருக்கவேண்டும்.தேர்தலில் பின்னடைவைக் கண்டிருக்கின்ற போதிலும் நாட்டின் மிகப் பெரிய சுன்னி முஸ்லிம் முகாமின் தலைவர் என்ற வகையில் ஹரிரியினால் பிரதமர் பதவியைத் தக்கவைக்கக் கூடியதாக இருக்கும்.  ஆனால், அரசாங்கத்தை அமைப்பதில் ஹிஸ்புல்லாவும் அதன் நேச அணிகளும் கூடுதலான செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையே காணப்படுகிறது. ஹிஸ்புல்லாவின் செல்வாக்கைக் குறைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை எடுக்குமாறே ஹரிரியை அவரின் பிராந்திய நேச நாடுகள் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன. அத்தகைய நடவடிக்கைகளில் அவர் இறங்குவாரேயானால் அதை ஹிஸ்புல்லா தடுக்கமுடியும்.அதனால் ஹரிரி ஒரு இக்கட்டான நிலைக்குள்ளாகியிருக்கிறார்.ஹிஸ்புல்லாவைக் கட்டுப்படுத்த அவரால் இயலாமல் இருப்பது குறித்து சவூதி அரேபியா பெரும் அதிருப்தியடைந்திருக்கிறது.

கடந்த வருடம் றியாத்துக்கு அழைக்கப்பட்ட ஹரிரி அங்கு தங்கியிருந்த நிலையிலேயே பிரதமர் பதவியை இரஜினாமா செய்வதாக அறிவித்தார்.பிறகு அவர் இராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்ட போதிலும் கூட சவூதி ஆசான்களுடனான அவரது உறவுகள் சீர்செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது.ஈரான் அணு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா அண்மையில் விலகியதையடுத்து ஈரானுக்கும் பிராந்தியத்தில் உள்ள அதன் போட்டிநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை மேலும் கூர்மையடைவதற்கான ஆபத்துகள் காணப்படுகின்றன.அத்துடன் தெஹ்ரானுக்கும் டெல் அவீவுக்கும் இடையிலான பதற்றமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுப் போக்குகள் லெபனானின் அரசியலில் தாக்கத்தைச் செலுத்தக்கூடியவையாகவுள்ளன.

சீர்குலைந்துகிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கான அடிப்படைச் சேவைகளை வழங்குவதற்கு உறுதியான செயற்பாடுகளை முன்னெடுத்து தன் மீதான  வாக்காளர்களின் நம்பிக்கையை மீளவும் நிலைநிறுத்தவேண்டியது ஹரிரியின் உடனடிப் பணியாக இருக்கிறது. அதேவேளை  தனது உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்கும் பிராந்திய அரசியலுக்கும் இடையில் இரு சமநிலையை அவர்  காணவேண்டியும்  இருக்கிறது.லெபனானின் முறிவடைந்து காணப்படுகின்ற அரசியல்  சமுதாயத்தையும் ஹரிரியின் கடந்தகாலச் யெற்பாடுகளின் இலட்சணத்தையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது இவையெல்லாம் சுலபமான காரியங்களாகத் தெரியவில்லை.

வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்