வடகொரியா அணுவாயுதங்களை கைவிடவேண்டும் என  அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக வற்புறுத்தினால் அமெரிக்க ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு குறித்து மீள் பரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தென்கொரியாவுடனான சந்திப்பையும் வடகொரியா  இரத்துச்செய்துள்ளது.

வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி ஸ்தாபனமான கே.என்.சி.ஏ.  இதனை தெரிவித்துள்ளது.

தென்கொரியாவுடன் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகளை கைவிட்டுள்ளதாக  வடகொரிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வடகொரியா ஒருதலைப்பட்சமாக அணுவாயுதங்களை கைவிடவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் வற்புறுத்தினால் அமெரிக்க - வடகொரிய தலைவர்கள் மத்தியிலான உச்சிமாநாடு குறித்து என்ன முடிவை எடுப்பது என்பது குறித்து தெளிவாகவுள்ளோம் என வடகொரிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என கே.என்.சீ.ஏ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

நாங்கள் ஒரு தலைப்பட்சமாக அணுவாயுதங்களை கைவிடுவதற்காக  அமெரிக்கா எங்களை அடிபணிய வைக்க முயன்றால் நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்ட மாட்டோம். உச்சிமாநாடு குறித்து மீள்பரிசீலனை செய்வோம் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என கே.என்.சீ.ஏ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.