(இரோஷா வேலு) 

20 தங்க பிஸ்கட்டுகளுடன் சென்னை மற்றும் சிங்கபூரிலிருந்து இலங்கை வந்த  இருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த இருவரும் மலவாயிலில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைத்து தங்கபிஸ்கட்களை கடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று இருவேறு சந்தர்ப்பங்களில் சிங்கப்பூரிலிருந்தும் மற்றும் சென்னையிலிருந்தும் வருகை தந்திருந்த இலங்கையர்கள் இருவர், 20 தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயற்சிக்கையில் சுங்க பிரிவு பரிசோதனை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சிங்கப்பூரிலிருந்து நேற்று வந்திருந்த சந்தேகநபர் 800 கிராம் நிறையுடைய எட்டு தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயற்சித்த போதே சுங்க பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 32 வயதான, 24 வயதானவர்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையிலிருந்து வந்திருந்த சந்தேகநபர் 1.2 கிலோ நிறையுடைய 12 தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயற்சித்த வேளையில் சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதன்படி இருவரும் கடத்த முற்பட்டுள்ள 20 தங்க பிஸ்கட்டுகள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றின் மொத்த பெறுமதி 13 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.