நாட்­டில் சட்டம் முழு­மை­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது. பாதாள உலகக் குழு­வினர் ஆட்சி நடத் தும் நல்­லாட்­சியே தற்­போ­துள்­ளது.

எனவே அர­சாங்­கத்தின் இவ்­வா­றானவேலைத்­திட்­டங்­க­ளினால், மலே­ஷி­யாவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துபோல் இலங்­கை­யிலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்­படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். 

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எரி­பொருள் விலை அதி­க­ரிப்­புடன் கடற்­றொழில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மீன­வர்கள் கட­லுக்குச் செல்­வதை தவிர்த்து வரு­கின்­றனர். மீனவக் குடி­யி­ருப்பு பிர­தே­சங்­களில் கறுப்­புக்­கொடி தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளது. எனினும் கடற்­றொழில் மற்றும் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்சர், குறித்த விவ­கா­ரத்தை தீர்ப்­ப­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்று முன்­வைக்­க­வுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

  எதிர்­வரும் 18 ஆம் திக­தி­யி­லி­ருந்து கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு சலுகை விலையில் மண்­ணெண்ணெய் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்ளார். அத்­துடன் அர­சாங்க தரப்பில் சிறு பிழை ஏற்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­ரத்ன தெரி­வித்­துள்ளார். 

ஆகவே இவ்­வாறு முரண்­பா­டான கருத்­து­க­ளையும் வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­வைப்­பதன் மூலம் அர­சாங்­கத்தை கொண்டு நடத்த  முடி­யாது. விலை  அதி­க­ரிப்புச் செய்­வ­தற்கு முன்னர் அது  குறித்து உரிய வகையில் கவனம் செலுத்­தி­யி­ருக்க வேண்டும். அவ்­வா­றில்­லாது தற்­போது பிரச்­சினை எழுந்த பின்னர் சலுகை வழங்­கு­வது குறித்து ஆராய்­வதன் மூலம் நல்­லாட்­சியின் இலட்­சணம் தெரிய வரு­கி­றது. ஆகவே இது முறை­யான அர­சாங்­க­மாக அல்­லாது பெட்டிக் கடை­யாக உள்­ளது.

மண்­ணெண்ணெய் விலை ஏற்­றத்­தினால் மீன­வர்கள் மாத்­தி­ர­மல்­லாது, தோட்டத் தொழி­லா­ளர்கள் மற்றும் விவ­சா­யி­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நீர் பாய்ச்சி விவ­சா­யத்தில் ஈடு­ப­டு­கையில் மண்­ணெண்ணெய் தேவை­யாக உள்­ளது. ஆகவே மண்­ணெண்­ணெயின் விலை குறைக்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கப்­ப­டு­கி­றது. எனினும் அர­சாங்கம் சில தரப்­புக்கு மாத்­திரம் சலுகை வழங்­க­வுள்­ள­தாக குறிப்­பி­டு­கி­றது. மண்­ணெண்ணெய் விலை ஏற்­றத்­தினால் சாதா­ரண மக்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். அதனால் விலையைக் குறைத்து சக­ல­ருக்கும் ஒரே விலையில் மண்­ணெண்ணெய் விநி­யோ­கிக்­கப்­பட வேண்டும். 

மேலும் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தின் பிர­தானி மற்றும் அரச மரக்­கூட்­டுத்­தா­ப­னத்தின் முன்னாள் தலைவர் உள்­ளிட்டோர் சிறையில் உள்­ளனர். வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான நாகராஜ் என்­ப­வரின்  முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குறித்த இரு­வரும் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். நாகராஜ் பிர­த­ம­ருக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் “குறித்த சிக்கல் இன்று நேற்று இடம்­பெற்ற ஒன்­றல்ல. 2017 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் முதல் இலஞ்சம் கோரு­வ­தா­கவும், அத்­தொகை கிடைக்கும் வரையில் குறித்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­காது இடை­யூறு மேற்­கொண்­ட­தா­கவும்” குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் குறித்த சம்­ப­வத்தின் பின்னர் நாக­ரா­ஜுக்கு நபர் ஒருவர் எழுத்து மூலம் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார். அதில் அவர் “ தான் விடு­தலைப் புலிகள் அமைப்­புடன் தொடர்­பு­டைய நபர் எனவும் நாக­ரா­ஜனை கொலை­செய்­யு­மாறு விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­லி­ருந்து உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அந்த உத்­த­ரவை தான் நிறை­வேற்­று­வ­தை­விட வேறு வழி­யில்லை. ஏனெனில் அவ்­வுத்­த­ரவை நிறை­வேற்­றா­வி­டத்து தன்னை அவ்­வ­மைப்பு கொன்­று­விடும்” எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

ஆகவே அது குறித்து நாக­ராஜன் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். அதை­ய­டுத்து அவ­சியம் ஏற்­படின் நாக­ரா­ஜனின் வீட்­டுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். நிலைமை தற்­போது இவ்­வா­றி­ருக்­க­கையில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் நாட்­டுக்கு வரு­வார்­களா?

அத்­துடன் கடந்த மாதத்தில் மாத்­திரம் 37 கொலைச்­சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. எனவே நாட்­டில சட்டம் முழு­மை­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது. பாதாள உலகக் குழு­வினர் ஆட்சி நடத்தும் நல்­லாட்­சியே தற்­போது உள்­ளது. 2015 ஆண்டு ஜன­வரி மாதம் ஏற்­பட்ட மாற்றம் இதுதான். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பாரா­ளு­மன்றில் எட்டு முறை கொள்கை விளக்­க­வுரை ஆற்­றி­யுள்ளார். அதில் எத்­தனை விட­யங்கள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன?

ஆகவே அர­சாங்­கத்தின் இவ்­வா­றான வேலைத்­திட்­டங்­க­ளினால் மலே­ஷி­யாவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துபோல் இலங்­கை­யிலும் ஆட்சி மாற்றம் ஏற்­படும். மேலும் இன்னும் மூன்று மாதங்­களில் மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். தேர்­தலை நடத்­து­மாறு நாம் அழுத்தம் கொடுக்­க­வுள்ளோம். மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­பட்டால் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெற்ற தோல்­வி­யை­விட கடு­மை­யான தோல்­வியை சந்­திக்க வேண்­டி­வரும் என்­பது அர­சாங்­கத்­திற்குத் தெரியும். அதனால் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதற்கும் முயற்சிக்கலாம்.

அதற்காக கலப்புத் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை காரணம் காட்டலாம். எனினும் கலப்புத் தேர்தல் முறையில் குறைபாடிருக்குமாயின் பழைய விகிதாசார முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டும். மேலும் மாகாண சபைத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் செய்ய முடியாது. எனவே  தொடர்ந்தும் மக்களை நெருக்கடியில் தள்ளாது நாட்டு மக்கள் தமக்கு விருப்பமானவர்களை ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்து கொள்வதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.