கர்நாடக தேர்தலில் இறுதிச்சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கர்நாடக மாநில சட்டசபையில் உள்ள 224 இடங்களில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 

இதில் பதிவான வாக்குகள் சுமார் 13 மணிநேரத்திற்கு மேலாக எண்ணப்பட்டன. 221 தொகுதிகளின் முடிவுகள் வெளியான நிலையில், ஒரு தொகுதியில் மட்டும் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இறுதி முடிவுகளின்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 104 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 78 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரகின்யவந்தா கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை பொருத்தவரையில் ( நேற்று மாலை 7 மணி நிலைவரப்படி) காங்கிரஸ் கட்சி 38 சதவீதம் வாக்குகளையும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. 36.2 சதவீதம் வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.4 சதவீதம் வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் 4 சதவீதம் வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 0.3 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளது.

அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி அளித்துள்ளார். பா.ஜ.க.வும் ஆட்சி அமைக்க அனுமதி கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.