அமெரிக்க மற்றும்  இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ்.மேர்சி கப்பலின் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இது ஒரு இணைந்த குழு பல்நாட்டு வைத்திய நிபுணர்களாலும்  வைத்திய வல்லுனர்களாலும்  வெற்றிகரமாக நடத்தப்பட்டு பித்தப்பை அகற்றப்பட்டது. 

இலங்கையர் ஒருவருக்கு டாவின்சி XI ரோபோ சத்திர சிகிச்சை முறையில் (Da Vinci XI Robot Surgical System) இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டது.

“திருப்புமுனையான இந்த சத்திர சிகிச்சையானது கூட்டுறவு, திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம்  சாத்தியப்பாட்டு எல்லைகளுக்கும் அப்பால் சென்றுள்ளது” என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்தார். 

“சர்வதேச மருத்துவத் துறைக்கு முன்னோடியான இந்த சாதனையில் இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் கூட்டுச்சேர்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கப்பலொன்றில் தளத்தில் வைத்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டது இதுவே எனக்கு முதல் அனுபவமாகும ;” என்று மூதூர் ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர். வைரமுத்து வரணிதரன் தெரிவித்தார். 

“இது மிகவும் ஸ்திரமாகவும் நகராமலும் இருக்கிறது. வைத்தியசாலையொன்றிலுள்ள சத்திர சிகிச்சை கூடமொன்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதைப் போன்ற உணர்வை எனக்கு தந்தது. வைத்தியசாலை கப்பலொன்றில் சத்திரசிகிச்சை செய்ய கிடைத்த இந்த வாய்ப்பானது அற்புதமான அனுபவமான இருந்ததுடன் , நானும் எனது அணியினரும் இதை ஒருபோதும்  மறக்கமாட்டோம் ” என்றும ; அவர் கூறினார்.

கடுமையான திட்டமிடல் ஆயத்தப்படுத்தலில் ஒரு முடிவாகவே இந்த சத்திர சிகிச்சையானது சுமுகமானதாகவும் வழமையானதொன்றாகவும் அமைந்திருந்தது. சத்திர சிகிச்சையின் வெற்றிகரமான முடிவின் பின்னர் நோயாளி, மேர்சி கப்பலின் மயக்க மருந்து பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

பின்னர் வைத்தியர் வரணிதரனின் சத்திர சிகிச்சைக்கு பின்னரான வழக்கமான மருத்துவ கண்காணிப்புகளின் நிமித்தம் நோயாளி மிகச் சிறந்த உடல் நலத்துடன் கப்பலில் இருந்து வெளியேறிச் சென்றார்.

பசுபிக் பங்காண்மை என்பது இந்து – பசுபிக் பிராந்தியத்தில் வருடாந்தம் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு அனர்த்த பதிலளிப்பு தயார்படுத்தல்  நடவடிக்கையாகும் இந்த வருடத்தின் நடவடிக்கையில் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பெரு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ மற்றும் சிவில் உறுப்பினர்கள் பங்கு கொண்டிருந்தனர். சாத்தியப்பாடுடைய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த பதிலளிப்பு நிலைமைகளுக்கு சிறந்த வகையில் தயாராகும் நிமித்தம் நடவடிக்கை இடம்பெறும் நாடுகளின் சகாக்களுடன் இணைந்து பணியாற்றும் 800 இற்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் பங்காளி நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களை பசுபிக் பங்காண்மை 2018 கொண்டுள்ளது.