(ப.பன்னீர்செல்வம், எம்.எம் மின்ஹாஜ்)

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  அந்நாட்டு ஜனாதிபதி ஜோகிம் கோக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜேர்மன் ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று பெர்லின் நகரிலுள்ள பெல்லெவ்யு மாளிகையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் முடிவில் பெல்லெவ்யு மாளிகையில் வைக்கப்பட்டுள்ள விசேடஅதிதிகளுக்கான புத்தகத்தில் ஜனாதிபதி மைத்தி;ரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.

சந்தின் போது இரு நாடுகளின் தலைவர்களும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நட்புறவினை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.  

கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஜேர்மனி அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு வழங்கிவரும் உதவிகளுக்கு   ஜனாதிபதி சிறிசேன  இதன்போது நன்றி  தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கட்டியெழுப்புவது தொடர்பிலும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய கூட்டுறவுத் துறைகளில் இருநாடுகளுக்குமிடையிலான  உறவினை அபிவிருத்திசெய்வதே எனனுடைய நோக்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று மாலை ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிராங்க் வோல்டர் ஸ்டென்மெயர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.