மண்சரிவு அபாயம் காரணமாக அக்கரப்பத்தனை சட்டன் தோட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 13.05.2018 அன்று மாலை பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக சட்டன் தோட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பெய்த மழை காரணமாக சட்டன் தோட்டத்தில் 10 வீடுகள் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு, வீட்டில் இருந்த பொருட்களும் சேதமாகியுள்ளன. ஏனைய அயல் வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தோட்ட நூலகசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கான உணவுகளை தோட்டத்தில் உள்ள இளைஞர்கள், பொது மக்கள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.