விழிகளுக்கு இமைபோல் நமை காத்திடுவாள் : விழுதுகள் நமக்கு வாழ்வின் ஆணிவேரவள் ! நம்பசி போக்கிட அவள்பசியை துறந்திடுவாள் : நம்நலன் காத்திடவே நாளும் உழைத்திடுவாள் ! இன்று உலக அன்னையர் தினம் அஷ்டிக்கப்படுகின்றது.

வசந்த காலத்தின் ஆரம்பத்தில் கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர். ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது.

நாம் கொண்டாடும் அன்னையர் தினம், அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர்தான் ஆரம்பித்து வைத்து வழிகாட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. 

அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். 

சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னா ஜார்விஸ் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். 

இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என்பதுதான் அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அம்மா’ என்ற வார்த்தைக்கு மட்டும்தான் என்றும் யாராலும் சாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கு சுயநலமே கிடையாது. இது அன்பு உலகம். சம்பளமே இல்லாத முழு நேர வாழ்நாள் வேலை அம்மா என்ற உத்தியோகமே. ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் கூடவே ஒரு தாயும் பிறக்கின்றாள். ஒரு பெண் என்பவள் மனைவி, தாய் என்ற பதவி பெறும் பொழுது ‘நான், என் விருப்பம், என் வயிறு’ என்ற அனைத்தையும் கருப்பையில் இட்டு தியாகம் செய்து விடுகின்றார். 

எந்த தாயும் ஒரு உயிர் தன் வயிற்றினுள் வளரும் காலத்தை மறக்கவே முடியாது. 

இன்று விஞ்ஞானம் முன்னேறி விட்டது. ஒவ்வொரு குடும்பமும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை. இருப்பினும் இன்று அதிகம் வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளனர். கடும் போட்டி நிலவும் நிர்வாகத்தில் தன் கர்ப்பத்தினை காரணம் காட்டி சில வசதிகள் பெறுவது கடினம். பல நிறுவனங்கள் சமீபத்தில் திருமணம் நடந்த பெண்களுக்கு வேலையே தருவதில்லை. இரவு, பகல் வேலைநேரம், நின்று கொண்டே செய்யும் வேலை, மணிக்கணக்காக கணனி முன் வேலை என காலத்தின் கட்டாயம் தரும் பாதிப்புகளை போராடி ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்கின்றாள். சிலருக்கு சில மருத்துவ பிரச்சினைகளும் இருக்கக் கூடும். வீடு, வேலைத்தளம் என இயந்திரம் போல் ஆகி விட்ட நிலையில் இந்த கால இளம் தாய்மார்களை கை கூப்பி வணங்கத்தான் வேண்டும். 

சுயநல மில்லாத, கலப்படமில்லாத ஒரு அன்பு என்றால் அது தாயிடம் கிடைக்கும் அன்புதான். இளமை நம்மை விட்டு போகும். வளமை நம்மை விட்டு போகாது, ஆனால் உங்களுக்கு எவ்வளவு  வயதாகி தாய் உயிருடன் இருந்தால் அத்தாயின் அன்பு மட்டும் நீங்கள் பிறந்த அன்றுதொட்டு இருந்தது போலவே இறுதிவரை இளமையாகவும் வளமையாகவும் இருக்கும். 

அனைத்து தாய்மார்களையும் இவ்வுலகம் கை கூப்பி வணங்குகின்றது. அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !