தேசிய  உற்பத்திகளை பாதிக்கும் சிங்கப்பூர்  நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தினை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிடின் நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து தேசிய  அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதாக  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முதலாளித்துவ கொள்கை கொண்ட சிங்கப்பூர் நாட்டின் சுதந்திர ஒப்பந்தம்  நடைமுறைப்படுத்தப்பட்டால் 1998ஆம்  ஆண்டு இந்திய வர்த்தக ஒப்பந்தத்தின்  மூலம் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார முகாமைத்துவ குழுவின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் அனைத்து துறைகளும் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது. நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கையில் பெருமளவில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது  இக்குழுவை ஜனாதிபதி  விரைவில் இரத்து செய்ய வேண்டும் என்று கூறியும் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சிப் பெற வேண்டுமாயின் பாராளுமன்ற தேர்தலினை உடனடியாக நடத்தி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் நலன் கருதியே அரசாங்கம்  பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் . ஆனால் தேசிய அரசாங்கம் பிற நாட்டு  நலன்களுக்காகவே ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றது.

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தினை பாதிக்கும் வகையில் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர ஒப்பந்த வர்த்தகம் எதிர்காலத்தில் பாரிய சமூகவியல் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஆகவே அரசாங்கம் முறையற்ற ஒப்பந்தங்களை கொண்டு வருவதை உடன்  நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் திறந்த பொருளாதார கொள்கையினை கொண்ட நாடாக காணப்படுகின்றது . தேசிய அரசாங்கம் சிங்கப்பூருடன் தற்போது மேற்கொள்ள வேண்டியது  ஒப்பந்தங்கள் அல்ல  தமது நாட்டில் செல்வத்தின் கருவூலமாக உள்ள மத்திய வங்கியில் மோசடிகளை செய்த அர்ஜுன மகேந்திரனை தமது நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும். 

ரஷ்யா நாட்டுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் விடயத்தில் அரசாங்கம்  காட்டும் அக்கறையினை  அர்ஜுன மகேந்திரன் விடயத்தில் காட்ட தவறவிடுகின்றமையின் காரணமாக அரசாங்கத்தின் மீதும் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கங்கள் தமது நாட்டின் நலன்களை மையப்படுத்தியே பிற நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் ஆனால் தேசிய அரசாங்கம் பிற  நாடுகளின்  நலன்களுக்காக மாத்திரமே  தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

சிங்கப்பூர் நாட்டுடன் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டால் நாட்டின் தேசிய உற்பத்திகள் பாரிய  பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டி வரும். மேலும் கடற்சார் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதால் சுற்று சூழலும் பெருமளவில்  எதிர்தாக்கங்களை அடையும் நிலைமைகள் தோற்றம் பெறும்.

சிங்கப்பூர் நாட்டு முதலீட்டாளர்கள் நமது நாட்டில்  எவ்வித வரி வீதங்களும்  செலுத்தாமல் வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். இதன் காரணமாக  பல சமூகவியல் பிரச்சினைகளும் தோற்றம் பெறும் ஆகவே அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட முறையற்ற நிர்வாகத்திற்கான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் . பாராளுமன்ற தேர்தலிற்கு முன்னர் அரசாங்கத்தின்  குறைகள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும்"என தெரிவித்தார்.