(கே. லாவண்யா)

2018 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதி வருமானமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுன்றது.

மேலும், இலங்கை ஆடை ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புக்களை தேடிச்செல்ல வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

8 ஆவது ஆடை கைத்தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் துணி , அணிகல உற்பத்தியாளர்கள் கண்காட்சி நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வின் போதே முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஆடை துறைசார் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய உபாயமார்க்கங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நிகழ்வு ஒரு வருடத்தில் இரு தடவைகள் முன்னெடுக்கப்படுகிறது. இது குறித்த அடுத்த கண்காட்சி நிகழ்வினை 2020 இல் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகள் பெறப்பட்டதன் பின் ஆடைத்துறைசார் ஏற்றுமதிகளில் அபிவிருத்தியினை நோக்கமுடிகிறது. அதனூடாக இவ்வருடத்திற்கான 5 பில்லியன் அமரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தை எட்டமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

2017 ஆம் ஆண்டில் ஆடைத்துறையில் 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஏற்றுமதி வருமாத்தை விட 4 சதவீத்தினால் அதாவது, 1.26 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமையால் சிறப்பான செயல்திறன் விளைவை காணமுடிகின்றது .ஆகையால் நாட்டின் ஆடை உற்பத்தி ஏற்றுமதிகளில் பாரிய திருப்புமுனையினை இவ்வருடத்தில் காணக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் , எதிர்பார்க்கப்படுகின்ற வருடாந்த ஆடை உற்பத்திக்கான ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இருப்பினும் , ஆடை உற்பத்திக்கான மூலப்பொருள் இறக்குமதிக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுகிறது , இதனால் ஆடை உற்பத்திகளுக்கான மூலப்பொருள் இறக்குமதி இனிவரும் காலங்களில் செயல்திறன் மிக்க வகையில் மேற்கொள்ளப்படவேண்டும். மீள்உற்பத்திகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான மூலப்பொருட்களை கொள்வனவு செய்தல் இப்பிரச்சினைக்கான ஒரு சிறந்த தெரிவாகும்.

இலங்கையின் ஆடைத்துறைக்கான முதன்மை சந்தையாக திகழும் ஐரோப்பாவில் நிலவுகின்ற திடீர் மாற்றங்கள், நிலையற்ற கொள்கைகள், உயர் வேலையின்மை இலங்கையின் ஆடைத்துறைக்கு அச்சுறுத்தலாகும். இலங்கை புதிய சந்தைவாய்பபுக்களை நோக்கி செல்ல வேண்டும். இப்பிரச்சினைகளை தீர்க்காமல் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்வது சுலபமானதல்ல என சுட்டிக்காட்டினார்.

 

இலங்கை ஆடை கைத்தொழில் நிறுவன தலைமை அதிகாரி பேராசிரியர் லக்தாஸ் பெர்னான்டோ இது குறித்து தெரிவிக்கையில், 

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இத்துறைக்கு நிலையற்றதாகும். அத்தோடு, இலங்கை இதில் தங்கியிருப்பது ஆபத்தானதாகும். ஆடைத்துறையானது புதிய திறன்களையும் உற்பத்தி செயல்திறன்களையும் வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதோடு, சவால்களுக்கு முகங்கொடுத்து சிறந்ததொரு நிலையை அடைவதற்கு பூகோளமயமாக்கல் மாற்றங்களுக்கு ஏற்பவும் இசைவாக்கமடைய வேண்டும்

தற்காலத்தில் சர்வதேச ரீதியல் தொழில்துறைகளுக்கான மாற்றங்கள் பாரியளவில் இடம்பெற்ற வண்ணமுள்ளன. இம்மாற்றங்கள் ஆடைத்துறை வடிவமைப்புகள் மற்றும் நுட்பங்களில் காணப்படுவதனை தெளிவாக பார்க்க முடிகின்றது. திடீர் மாற்றங்களை எதிர்நோக்குகின்ற இந்நிலையில் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய உபாயமுறைகள் கைக்கொள்ளப்பட வேண்டும். ஏன தெரிவித்தார்.