(இரோஷா வேலு) 

சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் கடற்கரை பரப்பில் அமைந்துள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடல்வளப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இதன் முதற்கட்டமாக வெலிகம - மிரிஸ்ஸ பகுதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுவதற்கான பணிகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும். அத்துடன் நீர்கொழும்பு, களுத்துறை, கல்கிஸை, தெஹிவளை போன்ற கடற்பரப்பிலுள்ள சட்டவிரோத நிர்மாணங்களும்  விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகரவிடம் வினவிய போது, 

சுற்றுலா பயணிகளை அதிகளவில் வருகை தரும் கடற்கரை பரப்பில் காணப்படும் சட்டவிரோத நிர்மாணங்களை முழுமையாக அகற்றுவதற்கான பணிகளை கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர், எனவே இந்த பணிக்கு அவசியமான பொலிஸ் பாதுகாப்பை வழங்கத் தயாராகவுள்ளோம் என்றார்.