ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்பக்தாதியின் சகாவின்  கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி  ஈராக் அவரின் நெருங்கிய சகாக்கள் சிலரை கைதுசெய்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்பக்தாதியின் நெருங்கிய சகாவொருவரை கைதுசெய்துள்ள  ஈராக்கிய அதிகாரிகள் கையடக்கத்தொலைபேசியின் அப்பினை பயன்படுத்தி அந்த அமைப்பின் நான்கு தளபதிகளை கைது செய்துள்ளனர்.

அபுஜய்ட் அல் ஈராக்கி என அழைக்கப்படும் இஸ்மாயில் அல் எதாவியை கடந்த பெப்ரவரியில் துருக்கி அதிகாரிகள் துருக்கியில் கைதுசெய்து ஈராக்கிடம் ஒப்படைத்துள்ளனர் என ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹிசாம் அல் ஹசீமி தெரிவித்துள்ளார்.

இந்த நபர் ஐ.எஸ். தலைவருடன் நேரடித்தொடர்புகளை கொண்டவர் என தெரிவித்துள்ள ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உலக நாடுகளில் இருந்து ஐ.எஸ். அமைப்பின் வங்கி கணக்குகளிற்கு பணத்தை அனுப்பும் நடவடிக்கைகளிற்கு இவர் பொறுப்பாகயிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்மாயில் அல் எதாவியின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள டெலிகிராம் என்ற அப்பினை பயன்படுத்தி ஐ.எஸ். அமைப்பின் தளபதிகளை சிரியாவிலிருந்து ஈராக்கிற்கு வரச்செய்துள்ள ஈராக்கிய அதிகாரிகள் பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

சிரியாவின் கிழக்கு யூப்பிரட்டிசிற்கு பொறுப்பாகயிருந்த ஐ.எஸ். உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எதாவியும் ,ஜமாலும் கைதுசெய்யப்பட்டுள்ளதை அறிவித்துள்ள ஈராக்கிய தொலைக்காட்சி உயிருடன் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ். உறுப்பினர்களில் இவர்களே முக்கியமானவர்கள் என தெரிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைக்கு உதவி வரும் அமெரிக்க படையினரின் உதவியுடன் இந்த கைதுகளை மேற்கொண்டுள்ளோம்,இவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் முக்கிய வங்கிகணக்குகள் உட்பட பல இரகசிய தகவல்களை பெறமுடிந்துள்ளது என ஈராக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தலைவரை நெருங்கி வருகின்றோம் என ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.