நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரே பொறுப்புக்கூற வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை  சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை நல்லாட்சி அரசாங்கமானது சீரழித்து விட்டது.

நாட்டின் வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதுடன் ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது. வட்டி வீதம் அதிகரித்துள்ளது, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று பெற்றோல், டீசல் என்பவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதற்கு சர்வதேச நாணய நிதியமே காரணமாகும். சர்வதேச நாணய நிதியத்தை நிபந்தனைகளின் பிரகாரமே பெற்றோல், டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. அடுத்த தவணை கடன்தொகை பெற்றுக்கொள்ளும் நோக்குடனே அரசாங்கம் பெற்றோல் டீசல்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

ஆகவே நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்பு கூற வேண்டும் என்றார்.