92 வயதில் மஹாதீர் முகமட் மீண்டும் மலேசிய பிரதமராகவுள்ளார்.

22 வருடங்கள் ஆட்சி செய்த பின்னர் 2003 ஆம் ஆண்டு அவர் பதவி துறந்தார்.

எனினும் தனது வாழ்க்கையின் பெரும் தவறை சரிசெய்வதற்காக அரசியலில் மீண்டும் ஈடுபடவுள்ளதாக அவர் அறிவித்தார்.

தற்போதைய பிரதமர் நஜீப்ரஜாக்கினை அதிகாரத்தில் அமர்த்தியதே தனது வாழ்வின்  பெரும் தவறு என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய பிரதமர் மற்றும் மலேசியாவின் ஆளும் யு.எம்.என். ஓ கட்சி  ஆகியவற்றுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மஹாதீர் முகமட் தற்போது எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்குகின்றார்.

தேர்தலிற்கு முன்னர் நான் இரண்டு வருடங்களே பதவியிலிருப்பேன் அதன் பின்னர் சிறையில் உள்ள தலைவர் அன்வர் இப்ராகிமிடம் அதிகாரத்தை வழங்குவேன் என மஹாதீர் முகமட் குறிப்பிட்டிருந்தார்.

மஹாதீர் முகமட்டின் அரசியல் ஆர்வமும் எதிரணியுடன் மோதுவதில் அவர் கொண்டுள்ள திறனும் மலேசிய மக்களிற்கு ஒன்றும் புதிய விடயமல்ல.

இதன்காரணமாக வீழ்த்த முடியாது என கருதப்பட்ட ஆளும்  கூட்டணியை அவர் வீழ்த்தியது குறித்து மலேசிய மக்கள் ஆச்சரியமடையவில்லை.

அரசியலில் ஆரம்ப நாட்கள்

மகாதீர் யு.எம்.என்.ஓ கட்சியில் 21 வயதில் இணைந்தார்.

ஆரம்ப நாட்களில் மருத்துவராக பணியாற்றிய அவர் 1964 ஆம் ஆண்டு மலேசியா பாராளுமன்றத்திற்கு சென்றார்.

1969 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு எதிராக பகிரங்க கடிதமொன்றை எழுதியதை தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் மலேய் குழப்பநிலை என்ற சர்ச்சைக்குரிய நூலை எழுதினார். அந்த நூலில் அவர் நாட்டின் மலேய் இனத்தவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என வாதாடினார்.

அதேவேளை தங்களை இரண்டாம்தர பிரஜைகளாக கருதும் மலேய் இனத்தவர்களையும் அவர் சாடினார்.

அவரது கருத்திற்கு இளந்தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டதால் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்ட்டார். 

1974 இல் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கல்வியமைச்சரானார். அதன் பின்னர் வேகமாக  அரசியல் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட மகாதீர் முகமட் 1981 இல் மலேசிய பிரதமரானார்.

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி

அவரது ஆட்சிக்காலத்தில் மலேசியா ஆசியாவின்  பொருளாதார வலிமை வாய்ந்த நாடாக மாறியது. இரட்டை கோபுரங்கள் போன்ற திட்டங்கள் மலேசியா குறித்த அவரது கனவை  புலப்படுத்தின.

ஜனநாயக மறுப்பு

எனினும் அவரது ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1998 ஆம் ஆண்டு அரசியல் சமூக சீர்திருத்தங்களை கோரியதற்காக கட்சியின் பிரதி தலைவர் அன்வர் இப்ராகிம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்குலகிற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதும் மகாதீர் முகமட்டின் குணாதிசயங்களில் ஒன்று.

2003 ஆம் ஆண்டு பதவிவிலகுவதற்கு முன்னர் யூத இனத்தவர்கள் தொடர்பில் கடுமையான கருத்தினை வெளியிட்டு மேற்குலகை சீற்றத்திற்குள்ளாக்கினார்.

கசப்பு மருந்து

அரசியலில் இருந்து இராஜினாமா செய்த போதிலும் மஹாதீர் முகமட் முற்றாக அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை.

தற்போதைய பிரதமர் உட்பட கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்த மஹாதீர்  இந்த வருடம் ஜனவரி மாதம் தனது 92 வயதில் தேர்தலில் குதிப்பது குறித்த தனது அறிவிப்பை வெளியிட்டார்.

மே 9 ம் திகதி அவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெற்றார். மலேசியாவை 60 வருடங்களாக ஆண்ட கட்சிக்கு தோல்வியை பரிசளித்துள்ளார்.