குருணாகலை - பதுளை வீதி அபிவிருத்தி நடவடிக்கையின்போது அகற்றப்பட்ட குருணாகலை இராணுவ நினைவுத் தூபிக்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நினைவுத்தூபியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  நாளை திறந்து வைக்கவுள்ளார். 

வடமேல் மாகாண சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் பழைய நினைவுத்தூபி காணப்பட்ட இடத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிகள் இலங்கை இராணுவத்தின்பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் அபிமானத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் முன்னர் காணப்பட்ட நினைவுத்தூபியிலும் பார்க்க சிறப்பான முறையில் வடமேல் மாகாணத்தில் உயிர்த் தியாகம்செய்த சகல இராணுவத்தினரினதும் விபரங்களை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய நினைவுத்தூபிக்கான மொத்த செலவு 27 மில்லியன் ரூபாவாகும்.

வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தற்காலிகமாக இராணுவ நினைவுத்தூபி அகற்றப்பட்டிருந்தது. 

அரசாங்கம் இராணுவத்தினரை மறந்து அவர்களது நினைவுத்தூபிகளை அகற்ற ஆரம்பித்துள்ளதென்று கூறி, இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேசத்தில் போராட்டங்களும் இடம்பெற்றது.

2016 ஓகஸ்ட் 31ஆம் திகதி வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக குருணாகலைக்கு வருகை தந்த ஜனாதிபதி  பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் உடனடியாகவே நினைவுத்தூபி அவ்விடத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்படுமென வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கமைய புதிய நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிக்கு 2016 நவம்பர் 30ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இம்மாதத்தில் இடம்பெறும் தேசிய இராணுவ நினைவு மாதத்துடன் இணைந்ததாக நாளை 11ஆம் திகதி புதிய இராணுவ நினைவுத்தூபியை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.