மாரவில, நாத்தாண்டி உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த லேகியம் விற்பனையில் ஈடுபட்ட  ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். 

Arrest

மாரவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச். டீ. ஆர். பிரியந்தவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 401 போதை மருந்து உருண்டைகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாரவில மற்றும் நாத்தாண்டி வரையான பிரதேசங்களில் போதை மருந்து உருண்டை, போதை வில்லைகள் விற்பனை அதிகரித்துள்ளதோடு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடுவா இரணவில சமய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஊர்வலம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட உருண்டைகளை இரசாயன பகுப்பாய்வாளருக்கு பரிசோதனைக்காக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாரவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச். டீ. ஆர். பிரியந்தவின் உத்தரவின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்கா, உப பொலிஸ் பரிசோதகர் சேமசிங்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.