
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவர இருக்கும் இலங்கைத் தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படமான கோமாளி கிங்ஸ் இன் முன்னோட்ட அறிவிப்பு நிகழ்வு கடந்த மாதம் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்திரைப்படம் இலங்கை தமிழ் சினிமாவின் பொன்னான நாட்களை ஞாபகப்படுத்தவும் அதை மீண்டும் நிலைநாட்டவும் எடுக்கப்படும் ஒரு முயற்சியே. அதற்கு ஏற்றவாறு கோமாளி கிங்ஸ் எனும் பெயர் 1976ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த வெற்றி நகைச்சுவைத் திரைப்படமான கோமாளிகள் திரைப்படத்தை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளது. கோமாளிகள் திரைப்படம் இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை மிகப்பெரிய வசூலை பெற்றுத்தந்த வெற்றி திரைப்படமாகும். விக்கிபீடியா தகவலின் படி கோமாளிகள் திரைப்படம் நாட்டின் பல பாகங்களில் மக்களின்அமோக ஆதரவோடு 70 நாட்களுக்கு மேலாக திரையிடப்பட்டது.
உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக இலங்கை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எம்மவர்களால் தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு நிகரான நல்ல கதைக்கரு உடைய, சிறந்த திறமைகளை வெளிப் படுத்துகின்ற, நேர்த்தியான தயாரிப்பு தரம் உடைய இலங்கைக்கே தனித்துவமான திரைப்படங்களை உருவாக்க முடியும் என நிரூபிப்பதே கோமாளி கிங்ஸ் திரைப்படக் குழுவினருடைய இலக்காகும்.
கோமாளி கிங்ஸ் திரைப்படம் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மலையக பிரதேசங்களில் படமாக்கப் பட உள்ளது. அதுமட்டுமின்றி இப்பிரதேசங்களின் மொழிநடைகளே இத்திரைப்படத்தில் பாவிக்கப் பட உள்ளது. இத்திரைப்படத்தின் கதைக்கரு நகைச்சுவை, அதிரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது. மேலும் கோமாளி கிங்ஸ் திரைப்படத்தை ஒரு கிங் இயக்குகிறார் என்றால் நம்புவீர்களா? ஆம்.கோமாளி கிங்ஸ் திரைப்படத்தை எழுதி இயக்கும் கிங் ரட்ணம் ஒரு அனுபவம் மிக்க விளம்பர மற்றும் விவரண திரைப்பட இயக்குநர். இவரின் பெயரை பற்றிய சந்தேகத்தை தீர்ப்பதனால், அமெரிக்காவின் கறுப்பினத்தின் புரட்சியாளர் மார்டின் லூதர் கிங் ஜூனியரின் ஞாபகமாக இவருக்கு கிங் எனும் பெயரை பெற்றோர் வைத்தனர். 1999 ஆம் ஆண்டு AH டிவி நிறுவனத்தில் தொலைக்காட்சி ஊடகவியலாளராக தனது பயணத்தை ஆரம்பித்த கிங், பின்பு நோர்வே மற்றும் இங்கிலாந்து நாடுகளிலுள்ள தொலைக்காட்சி நிறுவனங்களில் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு நாடு திரும்பியதை தொடர்ந்து கிங் பல விளம்பரங்களையும், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் சுயசரிதைகளையும் விவரண திரைப்படங்களையும் எழுதி இயக்கியுள்ளார். கோமாளி கிங்ஸ் கிங் ரட்ணத்தின் முதலாவது முழுநீள திரைப்படமாகும்.
கோமாளி கிங்ஸ் அணியில் இன்னும் பல முக்கியஸ்தர்களும் உள்ளடங்குகின்றனர். நடிப்பில் அண்மையில் கலாபூஷணம் விருது பெற்ற மூத்த கலைஞர் ராஜா கணேசன் உடன் சேர்ந்து 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்ற தர்சன் தர்மராஜ் மற்றும் நிரஞ்சனி சண்முகராஜா இத்திரைப்படத்தில் நடிப்பதோடு அண்மையில் வெளியான சிங்களத் திரைப்படமான பிரவேகைய திரைப்படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் கஜன் கணேசனும் கோமாளி கிங்ஸ் திரைப்படத்தில் நடிக்கின்றார். இயக்குநர் கிங் ரட்ணமும் சிங்கள சினிமாத் துறையில் புகழ் பெற்ற ஒப்பனைக் கலைஞரும் நடிகருமான பிரியந்த ஸ்ரீகுமாரவும் நடிகர் குழாமில் உள்ளனர்.
தயாரிப்பு குழுவின் தலைவராக சிரேஷ்ட உதவி இயக்குநரான நிமல் பிரான்சிஸ் பணிபுரிகிறார். சிரேஷ்ட ஒளிப்பதிவாளர் மஹிந்தபாலவின் சிஷ்யனான மஹிந்த அபேசிங்க ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். இவர்களுடன் அனுபவம் மிக்க படத்தொகுப்பாளர் ஹர்ஷ திஸாநாயக்க திரைப்படத்தின் படத்தொகுப்பை மேற்பார்வையிடுவர்.
கோமாளி கிங்ஸ் திரைப்படம் பல தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினால் “Picture This” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கபடுகின்றது. “Picture This” தயாரிப்புநிறுவனம் ஈஸ்வரன் பிரதர்ஸ் குழுநிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இத் தயாரிப்பு குழுவிற்கு ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தின் பிரதித் தலைவர் கணேஷ் தெய்வநாயகமும் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவரும் வழக்கறிஞருமான சு.செல்வஸ்கந்தனும் தலைமை தாங்குகின்றனர்.
கோமாளிகள் திரைப்படத்தின் முன்னாள் நட்சத்திரமும் சிரேஷ்ட அறிவிப்பாளருமாகிய பி.எச்.அப்துல் ஹமீட் கோமாளி கிங்ஸ் திரைப்படத்தின் கௌரவ வழிநடத்துநராக ஒத்துழைப்பு தருகிறார்.