"அர­சியல் பழி­வாங்­கல்­களை மேற்­கொள்­வ­தற்­காக விசேட நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­ப­டு­வ­தில்லை. மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கே அமைக்கப்படுகின்றன. அத்­துடன் குற்றம் செய்­யா­த­வர்கள் இதற்கு அச்­சப்­படத் தேவை­யில்லை" என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள தெரி­வித்தார்.

நீதி­மன்ற கட்­ட­மைப்பு திருத்­தச்­சட்­ட ­மூலம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தை­யிட்டு அது தொடர்­பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து தலதா அத்­துக்­கோ­ரள கூறு­கையில்,

"திரு­டர்­களை பிடிக்க வந்­த­வர்கள் திரு­டர்­க­ளா­கி­யி­ருப்­ப­தாக உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் காலத்தில் எதிர்க்­கட்­சி­யினர் அர­சாங்கம் மீது பாரி­ய­ளவில் குற்றம் சாட்டி வந்­தனர். அதன் கார­ண­மா­கவும் தேர்­தலில் எங்­க­ளுக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டது. அத்­துடன் அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரும்­போது மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களில் திரு­டர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து சட்­டத்தை நிலை­நாட்­டு­வதே பிர­தா­ன­மாக இருந்­தது.

அதற்­காக பாரிய நிதி மோசடி தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவை அமைத்து விசா­ரணை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம். என்­றாலும் கடந்த காலத்தில் நீதிமன்ற நட­வ­டிக்­கை­களில் ஏற்­பட்ட சில தாம­தங்கள் கார­ண­மாக மோச­டிக்­காரர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் தாம­த­மா­கின.அந்த தாம­தங்­களை இல்­லா­ம­லாக்கும் வகை­யிலே ஊழல் மோசடி தொடர்­பான வழக்­கு­களை விசா­ரணை செய்­வ­தற்­காக 3 விசேட மேல் நீதி­மன்­றங்களை  அமைக்க நட­வ­டிக்கை எடுத்தோம்.

நீதி­மன்ற திருத்த சட்­ட­மூலம் ஊடாக இந்த விசேட நீதி­மன்­றங்­களை அமைக்க பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீகா­ரத்தை பெற்­றுக்­கொள்ள கடந்த மார்ச் மாதம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­தி­ருந்தோம். என்­றாலும் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர்  இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­தனர். இந்த சட்­ட­மூ­லத்­துக்கு எதி­ராக 7மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

என்­றாலும் திருத்­தச்­ சட்­ட­மூ­லத்தின் சில சரத்­துக்கள் அர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்­தத்­துக்கு முரண்­ப­டு­வ­தாக உயர் நீதி­மன்றம் வழங்­கிய  தீர்ப்பின் பிர­காரம், அர­சி­ய­ல­மைப்புக்கு முரண்­ப­டா­த­வ­கையில் திருத்­தங்­களை மேற்­கொண்டு இந்த சட்டமூலத்தை இன்­றை­ய­தினம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க இருக்­கின்றோம். 

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் ஆத­ர­வுடன் இதனை நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும். அத்­துடன் இந்த விசேட நீதி­மன்­றங்கள் அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கே அமைக்­கப்­ப­டு­வ­தாக கூட்டு எதிர்க்­கட்சி தெரி­வித்து வரு­கின்­றது. இவர்கள் தெரி­விப்­ப­துபோல் எமக்கு அர­சியல் பழி­வாங்­கல்­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மாக இருந்தால் சிராணி பண்­டார நாயக்­கவை தொடர்ந்தும் பிர­தம நீதி­ய­ர­ச­ராக ஜனா­தி­பதி நிய­மித்­தி­ருப்பார். அவ்­வா­றான கீழ்த்­த­ர­மான நட­வ­டிக்­கை­களை நாங்கள் செய்­ய­வில்லை.

எனவே கடந்த காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஊழல் மோச­டி­க­ளினால் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட மக்­களின் பணத்தை மீண்டும் பெற்­றுக்­கொள்­வ­தாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கே விசேட நீதிமன்றங்களை அமைத்து விசாரணைகளை துரிதப்படுத்தவிருக்கின்றோம். ஆரம்பமாக ஒரு நீதிமன்றமே அமைக்கப்படுகின்றது. அதற்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். விசாரணைகள் ஒத்திவைக்கப்படாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அத்துடன் விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக குற்றம் செய்யாதவர்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.