(எம்எம். மின்ஹாஜ், ஆர்.யசி )

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியாக அடையாளப்படுத்தும் 16 உறுப்பினர்களும்  பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்தனர். 

எட்டாவது பாராளுமன்றதின் இரண்டாம் அமர்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன் போது புதிய பாரளுமன்ற ஒழுங்குகள் செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியாக அடையாளப்படுத்தி செயற்படும் 16 உறுப்பினர்களும் நேற்றைய தினம் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்த நிலையில் அதனை ஆதரித்த சு.வின் 16 உறுப்பினர்களும்  தமது  அமைச்சுப்பதவிகளை துறந்து தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தீர்மானம் எடுத்த பின்னர் தாம் எதிர்க்கட்சியில் அமரும் அனுமதியினை வழங்க வேண்டும் என 16 பேரின் கையொப்பம் இடப்பட்ட கடிதத்தை கடந்த மாதம் 27 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் தமது கோரிக்கையை முன்வைத்து அனுமதியினை பெற்றுக்கொண்டனர். 

இதன்மூலம் தமக்கு சுதந்தரமாக செயற்படும் வாய்ப்புகள் தற்போது கிடைத்துள்ளதாகவும் ரணில் எதிர்ப்பு அணியினர் சுட்டிக்காட்டினர். 

இதில் முதல் வரிசையில் எஸ்.பி. திசாநாயக, ஜோன் செனவிரத்தன, சுமேதா ஜி ஜெயசேனவும் இரண்டாம் வரியில் சுசில் பிரேமஜெயந்த, அனுரபிரியதர்சன யாப்பா, டி .பி ஏகநாயக, டிலான் பெரேரா ஆகியோரும், மூன்றாம்  வரியில் சந்திம வீரக்கொடி, லக்ஸ்மன் யாபா அபேவர்தன ,  தயாசிறி ஜெயசேகர, சுசந்த புஞ்சிநிலமேயும் நான்காம் வரிசையில் திலங்க சுமதிபால, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே , லக்ஸ்மன் வசந்த, தாரக பஸ்நாயகவும் ஐந்தாம் வரியில் அனுராத ஜெயரதனவும் தனிக் குழுவாக அமர்ந்துகொண்டனர். மேலும் இவர்கள் எதிர்க்கட்சியில் அமரும் வேளையில் கூட்டு எதிர்க்கட்சியாக செயற்படும் மஹிந்த அணியினர் ஆதரவு குரல் எழுப்பி ஆராவராப்படுத்தினர்.