தமிழக அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை என்று தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, 

 ‘ காவிரி நதி நீர் பிரச்சினையில் எல்லா கட்சிகளும் கண்துடைப்பு நாடகம் தான் நடத்துகின்றன. ஜூன் மாதம் வரை போராட்டம் நடத்துவார்கள். பிறகு முல்லைப் பெரியார் பிரச்சினை என்று மாறி விடுவார்கள். எந்த ஒரு போராட்டத்திலும் உறுதியாக நிற்கப் போவதில்லை.

காவிரி நதிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்கும் வகையில் இதுவரை எந்த கட்சியும் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் தே.மு.தி.க. உணமையான அக்கறையுடன் போராடி வருகிறது. கடந்த 20ஆம் திகதி இதற்காக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எங்கள் போராட்டத்தை பொலிஸார் தடுத்து விட்டனர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்களோடு நின்று போராடவே நான் விரும்புகிறேன். 

தமிழக அரசியலில் வலுவான மூன்றாவது அணி அமையுமா? என்று சிலர் கேட்டு வருகிறார்கள். நான்தான் அந்த மூன்றாவது அணி. அது உரிய நேரத்தில் நிரூபித்துக் காட்டப்படும். ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவது பற்றி இன்னொரு நடிகனான என்னிடம் கேட்காதீர்கள். மக்கள்தான் சிறந்த நடுவர்கள். அவர்கள் எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள். 

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள தேர்தலில் தே.மு.தி.க. யாருடனும் கூட்டணி அமைக்காது. அந்த தேர்தலை தே.மு.தி.க. தனித்து சந்திக்கும். புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் தே.மு.தி.க. தன் சொந்த காலில் நிற்கும். இதற்காக நான் இப்போதே தீவிர கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன். 2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நான் புதிய வியூகம் வைத்துள்ளேன். அதை இப்போதே வெளியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.