(எம்.மனோசித்ரா)

குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாரியப்பொல சிறைச்சாலையினுள் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புபட்டு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதாக கூறி அவரிடம் போதைப் பொருளை வழங்க முற்பட்ட வேளையிலேயே குறித்த நபரை சிறைச்சாலை பொறுப்பதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குளியாப்பிட்டிய (வயது 23) பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையையடுத்து இவரிடமிருந்து 33 கிராம் ஹெரோயின் மற்றும் 35 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபரை வாரியபொல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியபொல சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.