இரணைதீவில் குடியேறுவதற்கான அனுமதியினை பெற்றுத் தாருங்கள். சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக வெள்ளைக் கொடிகளுடன் எமது நிலதிற்கு வருகை தந்துள்ளோம். எமக்கான அடிப்படை வசதிகளைப் பெற்று நாம் நாங்களாக வாழ இதற்கான அனுமதி கிடைக்க உரியவர்களுடன் கலந்துரையாடுமாறு அழைத்து நிற்கின்றார்கள் இரணை தீவு வாழ் மக்கள். 

1992 ஆம் ஆண்டு முழுமையாக வெளியேற்றப்பட்ட மக்கள் பல துன்பங்கள், துயரங்கள் இழப்புக்களைச் சந்தித்து யுத்தத்தின் பின்னர் தமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி 2017 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்த இம் மக்கள் கடந்த 2 வாரத்திற்கு முன் வெள்ளைக் கொடிகள் சகிதம் இரணை தீவு சென்று தொடர் போராட்டத்தை மேற்கொண்டு தமது சொந்த இடத்தில் அநாதரவாக அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இங்கு மீள குடியேறி ஆலய வளாகத்தில் தங்யுள்ள ஒரு வயோதிபத் தாய் கூறுகையில்,

நாங்கள் காலா காலம் இந்த மண்ணில் இந்தத் தீவில் வாழ்ந்தோம். நான்கு திசை சென்றும் தொழில் செய்யக்கூடிய எமது தீவில் நாங்கள் நாங்களாக வாழ்ந்து வந்தோம். யுத்தம் காரணமாக வெளியேறியுள்ளோம். உறவுகளை உடைமைகளை இழந்தோம். போராடினோம். இனியும் போராட முடியாத நிலையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் இந்தத் தீவிற்கு மீளவும் வந்துள்ளோம். எம்மை மீளவும் திருப்பி அனுப்பாத நிலையில் ஒரு உத்தரவாதத்தை எமக்கு ஏற்படுத்தித்தரவேண்டும். நாம் இங்கு வரும்போது பிரச்சினைகள் வரும் என எதிர்பார்த்தோம். எனினும் எதுவும் நடக்கவில்லை. எனவே இங்கு எமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு, இங்குள்ள காடுகளை வெட்டுவதற்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு உரிய துறையினர் நடிவடிக்கை எடுத்துத் தர வேண்டும். 

கடற்றொழிலாளி ஒருவர் தெரிவிக்கையில்,

நாங்கள் தற்போது எமது சொந்த நிலத்திற்கு வந்துள்ளோம். இங்கு தொழில் செய்வதற்கு 20 லீற்றர் மண்ணெண்ணெய்  ஒருவாரத்திற்கு போதுமானதாக இருக்கும். ஆனால் முதல் இருந்த இடத்திலிருந்து இவ்விடத்திற்கு வந்து தொழில் செய்வதனால் ஒரு நாளுக்கே போதுமானது. இந்தநிலை மாறவேண்டும். சொந்த இடத்தில் நாம் இருந்தால் எமது வாழ்வாதாரம், பொருளாதாரம் எமக்கு போதுமானதாக இருக்கும். எமக்கானவற்றை யாருடைய தயவும் இன்றி பெற்றுக்கொள்ள முடியும். எனவே இங்கு நாம் சுதந்திரகமாக இருப்பதற்கு அதற்கான அனுமதி வேண்டும். இதனை பெற்றுத் தருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குடும்பத் தலைவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று நாம் பல எதிர்பார்ப்புக்களுடனேயே இங்கு குடியேறியுள்ளோம். இதுவரை கடற்படையினர் எமக்கு எவ்வித பிரச்சினையும் தரவில்லை. நாங்கள் அவர்களுக்கு பிரச்சினை கொடுக்கவில்லை. இங்குள்ள எமது சொந்த காணிகளில் குடியேற வேண்டும். இந்த பற்றைக் காடுகள் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். அடிப்படை தேவைகளாக உள்ள குடிநீர், சுகாதார வசதிகள், உறைவிடங்கள் அமைத்துத் தர வேண்டும். இவற்றை விரைவாக செய்து தருவதன் மூலம் நாம் நாமாக வாழ்வதற்கு நாங்களே முயற்சிகளை மேற்கொள்வோம். எனியும் நாங்கள் அலைக்கழிக்க முடியாது. சொந்த நிலத்தில் வாழ்வதற்கான உதவிகளை அரசாங்கம் செய்து தர வேண்டும் என கூறினார். 

சொந்த நிலத்தில் குடியேற வேண்டும் என்ற ஆவலுடன் ஆலயத்தில் குடியேறியுள்ள மக்கள் அவர்களுடைய காணிகளில் குடியேற வேண்டும் என்று அங்கு கொட்டில்களை அமைப்பதற்கான வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

- எம். நியூட்டன்