வவுனியாவில் கோழி வளப்போர்கள் மீது பிரதேச சபையினரால் அரச வரி அறவிடப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக சுயதொழிலான கோழி வளர்ப்பினைக் கைவிடவேண்டிய நிலைக்குச் சென்றுள்ளதாகவும் இவ்விடயத்தில் வடமாகாண சபை தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மேலும் தெரிவிக்கும்போது,

கடந்த சில தினங்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களினால் சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம் பகுதிகளில் கோழி வளர்ப்பினை மேற்கொள்ளும் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கோழி வளர்ப்பினை மேற்கொண்டு வருபவர்களுக்கு வரி அறிவீடு செய்து வருகின்றனர்.

சுயதொழில் மேற்கொள்ளும் வறிய மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக இவ்வாறு கோழி வளர்ப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.  வட மாகாணசபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேற்கொள்வதற்காக தெரிவித்து கோழிகளை வழங்கிவிட்டு தற்போது பிரதேச சபையினூடாக மாதாந்த வரி அறிவிட்டு வருகின்றனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசாங்கம் சுயதொழில்களை மேற்கொள்வதற்கு எவ்வித அரச வரிகளையும் விதிக்கவில்லை. மேலும் சுயதொழிலினை மேற்கொள்பவர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றது. இவ்வாறு இருக்கும்போது வடமாகாணத்தில் கோழி வளர்ப்பினை மேற்கொள்வதற்கு வரி அறவிடப்படுவதை நாங்கள் முற்றாக ஏற்றுக் கொள்ள முடியாது இவ்விடயத்தில் வடமாகாணசபை உடனடியாக தலையிட்டு ஒரு தீர்வினைப் பெற்றுத்தருமாறு பொதுமக்கள் மேலும் கோரியுள்ளார்கள்.