எனது ஓய்வு குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். 2020ஆம் ஆண்டுடன் நான் இளைபாறப்போகிறேனா  என பலர் கேட்கின்றனர். ஆனால்  2020 ஆம் ஆண்டு ஆண்டுடன் நான் ஓய்வுபெற மாட்டேன். செய்துமுடிக்க இன்னும் பல கடமைகள்  எனக்கு உள்ளன என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பது  சாம்பலின் கீழ் உள்ள நெருப்பை போன்றது. தேசிய பிரச்சினைகளை தீர்க்க எவருக்கும் தேவை இருப்பதாக தெரியவில்லை. எனினும்  வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு  மக்கள் கைகளில் மீண்டும் துப்பாக்கி ஏந்தாத நிலைமையை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றது.  தொழிலாளர்  தினத்தை தேசிய ஒற்றுமையாக்குக என்ற தொனிப்பொருளில் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் கிழக்கில் நடத்தபட்ட இந்த மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே    ஜனாதிபதி   மேற்கண்டவாறு கூறினார். 

ஜனாதிபதி அங்கு  தொடர்ந்து உரையாற்றுகையில் 

தொழிலாளர் உரிமைகளை பெற்றுக்கொள்ளவும்,  வரப்பிரசாதங்களை உறுதியாக பெற்றுக்கொள்ளவுமே  இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் நாம் பல வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம்.   நாட்டில் தேசிய ஒற்றுமையினை ஏற்படுத்துவதில் தொழிலாளர்களின்  ஒற்றுமை அவசியமாக உள்ளது. 

 நாடு  மிககொடூரமான யுத்தமொன்றினை  எதிர்கொண்டதுடன் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேர்ந்தது. சகல இனத் தலைவர்களும் மரணத்தை தழுவ நேர்ந்தது. எமது  இராணுவத்தில்  பலர் உயிர் இழந்தனர்.  புலிகளின் பலர் உயிர் இழந்தனர். இந்த நிலைமை இனியொருபோதும் இடம்பெறக் கூடாது. கடந்தகால  அனுபவங்களை பாடமாக கொண்டு சரியான பாதையில் பயணிக்க வேண்டும். இதில் தொழில் சங்கங்கள், அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானதாகும்.  யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள்  நெருங்குகின்றன. யுத்தத்தின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய பல விடயங்களை இந்த மூன்று ஆண்டுகளில் நாம் முன்னெடுத்துள்ளோம். 

சந்தேகம் ,பயம் ,நம்பிக்கையில்லாத சூழலை நீக்கி  இன்று அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.  நாங்கள் நல்லிணக்கத்தை பலப்படுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகளை சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்களிடம்   ஜனநாயக உணர்வுகள் உள்ளதா என்ற கேள்வியை கேட்க வேண்டும். 

மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் இடம்பெறுவதை தடுக்கும் தெளிவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க எம்மால் இன்னும் முடியாது போயுள்ளது.  யுத்தத்தினாலோ, துப்பாக்கி மூலமாகவோ   பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஜனநாயக ரீதியில் அமைதியாக தீர்வு காண வேண்டும். இன்றைய யுகத்தில் அதுவே தீர்வுக்கான சிறந்த வழிமுறையாகும். இதில்  அரசியல் கட்சிகள் நேர்மையாக செயற்பட வேண்டும். நேர்மையை    செயற்பாட்டின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும்.

 அதிகாரத்தை கைப்பற்ற பலர் பல்வேறு  காரணிகளை கூறுகின்றனர். அதிகாரத்தை  பெற்றுக்கொள்ள பலர் கனவு காண்கின்றனர். ஆனால் தேசிய பிரச்சினையை தீர்க்க எத்தனை  பேருக்கு  அக்கறையும் உணர்வு பூர்வமான தேவையும் உள்ளன என்பதே எனது கேள்வியாகும். இந்த பிரச்சினைகள்  சாம்பலின் கீழ் உள்ள நெருப்பை போன்றது. வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு  மக்கள் கைகளில் மீண்டும் துப்பாக்கி ஏந்தாத நிலைமையை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் எவரும் இது குறித்து சிந்திக்கவில்லை. 

எனினும் நாம் எமது குறுகிய ஆட்சிக் காலத்தில்  பல திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைபடுத்தியுள்ளோம். சில குறைபாடுகள் உள்ளன.  ஆனால் அவற்றை  சரிசெய்ய வேண்டும். உண்மையான சமாதானம் ஒன்றினை உருவாக்க சகல அரசியல் கட்சிகளும் நேர்மையாக செயற்பட வேண்டும்.  அர்ப்பணிப்பும் எடுத்துக்காட்டும்  இருக்க வேண்டும். அதிகாரத்தில் இல்லாதவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை கூறு முடியும். ஆனால் பிரச்சினையின் சிக்கல்கள் என்ன என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். 

ஆகவே தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க சகலரும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் முன்வர வேண்டும். பொது மக்களின் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை  தீர்க்க கடந்த மூன்று  ஆண்டுகள் பெருமளவு பணியாற்றியுள்ளோம்.  இந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிய முடிகின்றது. எமது நாட்டில் வறட்சி ஒன்று உள்ளது. இந்த வறட்சி இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளது. உலகத்தில் பல இடங்களில் மக்கள் இயற்கையுடன் இணைந்து போராட வேண்டிய நிலைமை உள்ளது. ஆகவே அனைவரும் புரிந்துணர்வு அனுபவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். வேலைத்திட்டம் இல்லாத சிலர் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். 

 2020 ஆம் ஆண்டுடன்  நான் இளைபாறப்போகிறேனா  என பலர் கேட்கின்றனர். சமூக வலைப்பதிவு தளங்களில் இந்தக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். 

2020 ஆம் ஆண்டு ஆண்டுடன் நான் ஓய்வுபெற மாட்டேன். செய்துமுடிக்க எனக்கு இன்னும் பல கடமைகள் உள்ளன.  இந்த நாட்டில் நேர்மையான தலைவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? களவாடாத,கொலை கொள்ளைகளில் ஈடுபடாத  எத்தனை பேர்  அரசியலில் உள்ளனர்  ? இந்த கேள்வி என்னிடம் உள்ளது. ஆகவே நாம் தூய்மையான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் . இதில் கள்ளர்கள், கொலையாளிகள், ஊழல் வாதிகள் எவரும் தேவையில்லை. மக்களை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களே வேண்டும். 2020ஆம் ஆண்டு  புதிய ஆட்சியினை அமைக்க சிலர் கனவு காண்கின்றனர். எமது அணியிலும்  சிலர் அவ்வாறு கூறுகின்றனர். அதற்கு பொருத்தமான சகலரும் எம்முடன் இணையுங்கள். தேசிய ஒற்றுமையை  எங்கு உருவாக்க முடியுமோ நாம் அங்கு இருப்போம் . இந்த நாட்டில் வறுமை  எங்கும் இல்லாத சூழல் உருவாக்க வேண்டுமோ அங்கு நாமும் இணைந்து செயற்படுவோம். இளைஞர்களுக்கு நல்ல வேலைத்திட்டம் எங்கு உள்ளதோ அங்கு நாம் இருப்போம். படித்த  கற்ற சமூகம் எங்கு உள்ளதோ அங்கு நாம் இருப்போம். 

ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து  நேர்மையாக செயற்பட வேண்டும். பலர்  கற்பனை கதைகளை கூற முடியும். பல்வேறு கனவுகளை  காண முடியும். ஆனால் அவர்களுக்கு  மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தெரியாது. மக்களின்  மனசாட்சிகளை தெரிந்துகொள்ள வேண்டும். நாம் அரசியலில் பலவீனம் அடைந்துள்ளதாக சிலர்  கூறுகின்றனர். ஆனால்  நாம் பலவீனமடையவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 7ஆசனங்களுடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, மூன்று துண்டங்களாக பிளவுபட்ட வரலாறுகள் உள்ளன. ஏனைய கட்சிகளுக்கும் இவ்வாறான வரலாறுகள் உள்ளன. 

ஆனால் நாம் மீண்டெழுவோம். முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட  கட்சியாக மாற்றுவோம். ஜனநாயக கட்சியாக மாற்றுவோம். அதன்  மூலம் பலப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்றினை நாம் உருவாக்குவோம். ஆகவே இதற்காக அனைவரும்  எம்முடன் ஒன்றிணைத்து எம்மை ஆதரியுங்கள். இந்த அரசாங்கத்தில் எதிர்வரும் காலத்தில்  எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன். மக்களின் பிரச்சினைகளுக்கான உறுதியான தீர்வுகளை நாம் பெற்றுத் தருவோம்  என்றார்.