ஆட்சி பீடத்தில் இருக்கும் போது கனவு காண்பதில் பிரயோசனம் இல்லை. செய்வோம் என்று கூறுவதனை விட செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் ஆட்சி பீடத்தில் இருந்தும் பிரயோசனம் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் நேற்று கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேறகண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர் அவர் மேலும் உரையாற்றுகையில், 

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை தெரிவு செய்வதற்கு கட்சியினர் அனைவரையும் காலி முகத்திடலுக்கு அழைத்து பொது மக்களின் இணக்கத்துடன் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும்.

அத்துடன் முகாமைத்துவம் செய்வதனை பார்க்கிலும் ஆட்சி பீடம் கையில் இருக்கும் போது மக்களுக்கு சலுகை வழங்குவதே சீரானது.  உர மானிய சலுகை, பாடசாலை வுவச்சருக்கு பதிலாக இலவச சீருடை, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, காணி உறுதிப்பத்திரம், சமுர்த்தி ஆகியவற்றை 18 மாத காலப்பகுதிக்குள் வழங்காவிடின் ஐக்கிய தேசியக் கட்சியை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

ஆட்சி பீடத்தில் இருக்கும் போது கனவு காண்பதில் பிரயோசனம் இல்லை. செய்வோம் என்று கூறுவதனை விட செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் ஆட்சி பீடத்தில் இருந்தும் பிரயோசனம் இல்லை. 

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு பச்சை கொடி காண்பித்தால் போதுமானது அதன் பின்னர் மக்களுக்கு சலுகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் ஆரம்பிப்போம். 

இனிமேலும் கட்சியினருக்கு துரோகமிழைக்க நான் தயாராக இல்லை. தற்போது நிறுத்தப்பட்டிருந்த உர சலுகையை நாம் மீண்டும் வழங்கவுள்ளோம். 

பொருளாதார வளர்ச்சி வீதம் என்ற அடிப்படையில் இலக்க சுட்டெண்களினால் நாட்டு மக்களின் துயரத்தையும் கஷ்டத்தையும் கணிக்க முடியாது. புள்ளிவிபரங்களினால் மக்களின் கஷ்டத்தின் எல்லை கணிக்க முடியாது. 

அத்துடன் முகாமைத்துவத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. முகாமைத்துவம் செய்வதனை பார்க்கிலும் ஆட்சி பீடம் கையில் இருக்கும் போது மக்களுக்கு சலுகை வழங்குவதே சீரானது. 

மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தலைமையில் அபிவிருத்தி மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் செய்வது குறித்து குழுவொன்றை நியமித்தார். இந்த குழுவின் பரிந்துரைகளை நான் இங்கு முன்வைக்கின்றேன். 

இதன்படி இன்னும் மீதமுள்ள 18 மாத காலப்பகுதிக்குள் இந்த பரிந்துரைகளை நிறைவேற்றினால் மக்கள் மத்தியில் சென்று வெற்றிகரமான நிலைமையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். முதலாவது பரிந்துரையாக உர மானியத்தை வவுச்சர் முறையில் அல்லாது பழைய முறைப்படி வழங்க வேண்டும் என பரிந்துரைத்தோம்.

இதற்காக அமைச்சரவையிலும் நான் எதிர்ப்பு வெளியிட்டு தற்போது பழைய முறைமைக்கு கொண்டு வந்துள்ளோம். முடியும் என்றால் உர மானியத்தை இலவசமாக வழங்க வேண்டும். அப்படி செய்தால் ஐக்கிய தேசியக் கட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

எமது குழுவின் இரண்டாவது பரிந்துரை பாடசாலை வவுச்சர் சம்பந்தமானது. நான் கூறுவதற்கு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறையாக நினைக்க கூடாது. எனது தந்தை மிகவும் ஆர்வத்துடன் ஆரம்பித்ததே பாடசாலை இலவச சீருடையாகும். தற்போது பொது மக்கள் பிரேமதாஸவின் சீருடையை வழங்குமாறே கோருகின்றனர். ஆகவே இலவச பாடசாலை சீருடையை வழங்க வேண்டும். அதுமாத்திரமின்றி எதிர்வரும் காலங்களில் சீருடையுடன் இலவசமாக பாதணியும் வழங்க வேண்டும்.

அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் 8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி வழங்க வேண்டியுள்ளது. அதனை துரிதமாக வழங்க வேண்டும். மேலும் கிராம சேவகர் பிரிவு தாமரை மொட்டு ஆதரவு கிரமா சேவகர்களே அதிகமாக உள்ளனர். அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

இதன்படி உர சலுகை, பாடசாலை வவுச்சருக்கு பதிலாக இலவச சீருடை, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, காணி உறுதிப்பத்திரம், சமுர்த்தி ஆகியவற்றை 18 மாத காலப்பகுதிக்குள் வழங்காவிடின் ஐக்கிய தேசியக் கட்சியை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். ஆகவே இனிமேலாவது நாம் திருந்த வேண்டும். 

மேலும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை தெரிவு செய்வதற்கு கட்சியினர் அனைவரையும் காலி முகத்திடலுக்கு அழைத்து பொது மக்களின் இணக்கத்துடன் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.