ஈரான் வலிமையான அணுவாயுதத் திட்டமொன்றைக் கொண்டிருந்தது என்று ஒரு தகவலை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு கடந்தவாரம் கூறியிருந்தார். அத் தகவலை வெளியிடுவதற்கு அவரால் தெரிவு செய்யப்பட்ட நேரத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை புரிந்துகொள்வது எவருக்கும் சிரமமானதல்ல. ஈரானுடனான அணு உடன்படிக்கையை கைவிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் யோசித்துக்கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் ஈரானின் அணுத்திட்டம் தொடர்பிலான ஆயிரக்கணக்கான ஆவணங்களை நெதான்யாகு வெளியிட்டிருக்கிறார்.

ஒபாமா நிருவாகம் ஈரானுடனும் வேறு ஐந்து  நாடுகளுடனும் செய்துகொண்ட அந்த உடன்படிக்கை மீதான தனது வெறுப்பை ட்ரம்ப் ஒருபோதும் மறைத்ததில்லை. இவ்வார இறுதியில் அல்லது அதற்கு முன்னதாக உடன்படிக்கை தொடர்பில் அவர் ஒரு தீர்மானத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெதான்யாகு வெளிப்படுத்திய ஆவணங்கள் இஸ்ரேலிய உளவாளிகளினால் ஈரானிடமிருந்து திருடப்பட்டவையாகும். அணு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக வலிமையான அணுவாயுதத் திட்டமொன்றை ஈரான் கொண்டிருந்தது என்றே அந்த ஆவணங்களில் இருக்கக்கூடிய தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தன்னிடம் இருந்திருக்கக் கூடிய எந்த அணுத்திட்டமும் சிவிலியன் நோக்கங்களுக்கானவையே என்று ஈரான் எப்போதுமே கூறிவந்திருக்கிறது.

 

ஈரான் ஒரு ஏமாற்று வேலையைச் செய்திருக்கிறது என்பதை ஆவணங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன என்று நெதான்யாகு வாதிட்டார். அவரது வாதத்தை அமெரிக்காவும் உடனடியாகவே ஆதரித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், ஈரான் அணு உடன்படிக்கை மீதான  இஸ்ரேலின் எதிர்ப்பு ஒன்றும் புதியதல்ல. மேற்காசியாவில் அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நேசநாடுகளான இஸ்ரேலும் சவூதி அரேபியாவும் வெளிக்காட்டிய எதிரப்பையைும் பொருட்படுத்தாமல் ஈரானுடனான பல்தரப்புப் பேச்சுவார்த்தைகளை ஒபாமா நிருவாகம் முன்னெடுத்தது. ஆனால், ட்ரம்பின் கீழான அமெரிக்காவின் புதிய நிருவாகம் ஈரானுடன் குரோதப்போக்கை கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில் இஸ்ரேல் அணு உடன்படிக்கை மீதான அதன் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. 

நெதான்யாகு வெளியிட்ட தகவல்கள் உடன்படிக்கை தொடர்பில் ட்ரம்ப் அடுத்துவரும் நாட்களில் மேற்கொள்ளக்கூடிய தீர்மானத்தின் மீது செல்வாக்கைச் செலுத்துவதை இலக்காகக் கொண்டவை என்பது தெளிவானது.

 

நெதான்யாகு வெளியிட்ட ஆவணங்களும் அவற்றில் உள்ளடங்கியிருப்பதாக கூறப்படுகின்ற தகவல்களும் ஈரானுடனான அணு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரான நிலைவரத்துடன் தொடர்புடையவை என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். ஆவணங்கள் நம்பகத்தன்மையானவையாக இருந்தாலும் கூட அவை ஈரானிடம் அணுவாயுதத் திட்டமொன்று இருந்ததாகவே கூறுகின்றன. விரிவான கூட்டு நடவடிக்கைத்திட்டத்தின் நிபந்தனைகளையோ, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் ஈரானுக்கும் இடையில் கைச்சாத்தான சர்வதேச உடன்படிக்கையையோ தெஹ்ரான் மீறியதற்கான எந்த அறிகுறியுமேயில்லை. இஸ்ரேல் கூறுவதை ஆதரிக்கின்ற ட்ரம்ப் நிருவாகமும் கூட அணு உடன்படிக்கையை மீறுகின்றது என்று கூறவில்லை.

ஏப்ரில் 30 நெதான்யாகு நடத்திய செய்தியாளர் மகாநாட்டுக்குப் பிறகு சர்வதேச அணுசக்தி நிறுவனமும் கூட உடன்படிக்கையை ஈரான் மீறியிருக்கிறது என்பதைக் காண்பிக்கக்கூடிய நம்பகமான எந்தத் தகவலும் தன்னிடம் இல்லை என்றுதான் கூறியிருக்கிறது. எனவே இஸ்ரேல்  கூறுவதைப் போன்று ஈரானிடம் அணுவாயுதத் திட்டமொன்று உண்மையில் இருந்திருக்குமானால், அணு உடன்படிக்கை அதை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இது உடன்படிக்கைக்கு ஆதரவான வாதத்தைத்தானே வலுப்படுத்துகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் , ஈரானுடனான உடன்படிக்கை ஏன் கைவிடப்படவேண்டும் என்பதற்கான நம்பிக்கைதரக்கூடிய வாதத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னமும் முன்வைக்கவில்லை. ஆனால் , உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி ஈரான் மீது மீண்டும் தடைகளை விதிக்குமாக இருந்தால், உடன்படிக்கைக்கு இணங்க தொடர்ந்தும் செயற்படுவதற்கு அது உற்சாகமளிப்பதாக இருக்காது. மாறாக உடன்படிக்கை மீது நம்பிக்கை இழக்கவே தூண்டுதலாக அமையும்.

எனவே நடைமுறை ரீதியாக நோக்குகையில், ஈரான் உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு ட்ரம்ப் தீர்மானிப்பாரேயானால், அது எவருமே மீறாத உடன்படிக்கையொன்றை  இல்லாமல் செய்வதன் ஆரம்பமாக அமையும். அதனால், குறுகிய நோக்குடனான புவிசார் அரசியல் அல்லது தத்துவார்த்த கணிப்பீடுகளின் அடிப்படையில் அல்லாமல்  உடன்படிக்கையின் நற்கூறுகளையும் விளைபயன்களையும் அடிப்படையாகக் கொண்டே அமெரிக்கா அதை மதிப்பீடு செய்யவேண்டும்.

வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்