நடிகை ஹன்சிகா மொத்வானி தமிழில் தயாராகும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

இவர் தமிழில் நடிக்கும்  இருபத்தைந்தாவது படமாகும்.   

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மொத்வானி. அண்மைகாலமாக இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவியவில்லை. இந்நிலையில் இனி பெண்களை மையப்படுத்திய திரைக்கதையில் மட்டுமே நடிக்கவிருக்கிறேன் என்று அறிக்கை விட்டிருந்தார்.

ஆனாலும் இயக்குநர்கள் சொன்ன கதை பிடித்திருந்தால் அதிலும் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த வகையில் தற்போது அவர் விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை என்ற படத்திலும் அதர்வா ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிமுக இயக்குநர் ஜமீல் என்பவர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து படத்தின் இயக்குநரிடம் கேட்ட போது,‘ ஹன்சிகா இதுவரை நடிக்காத கேரக்டரில் நடிக்கிறார்கள். இந்த திரைக்கதையில் அவர்களுக்கு சில சண்டைக்காட்சிகளும் இருக்கின்றன. அவர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல்படம் இது என்று சொல்லலாம். இந்த படத்தின் படபிடிப்புகள் ஜுன் மாதத்தில் ஐரோப்பாவில் தொடங்குகிறது.’ என்றார்.