(இரோஷா வேலு) 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி உள்நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கடந்த 26 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் பிக்கு மாணவர் உட்பட 10 மாணவர்களை இன்று பிணையில் செல்ல கோட்டை பிரதான நீதவான் லால் ரணசிங்க அனுமதித்துள்ளார். 

கடந்த 26 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவர்கள் இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் விளக்கமறியல் காலம் நிறைவடைந்த  நிலையில் இன்று கோட்டை பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது  மேற்கண்ட உத்தரவு நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக கடந்த மாதம் 26 ஆம் திகதி பல்கலைக்கழகங்களில் 2016 மற்றும் 2017 ஆம் கல்வியாண்டுக்காக பெளத்த சமய மற்றும் ஆய்வுத்துறைக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவதை இடைநிறுத்தியுள்ளமையை கண்டித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ பிக்குகள் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இதன்போது, குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி உள்நுழைய முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த மாதம் 27 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் அவர்கள் இன்று வரையில் விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தனர். 

இந்நிலையிலேயே இது தொடர்பான வழக்கு இன்று  கோட்டை பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்  இன்று விசாரிக்கப்பட்டபோது 10 மாணவர்களையும் 10 இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையிலும்  செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.