(இரோஷா வேலு) 

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளை கடத்த உதவிய இந்தியர்கள் நால்வரை இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மேலும் சுங்க பிரிவு குறிப்பிடுகையில், 

சென்னையிலிருந்து வந்திருந்த நான்கு இந்திய பிரஜைகள் தங்க பிஸ்கட்டுகளை கடத்த உதவிய குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். 

இவர்கள் நால்வரும் டுபாயிலிருந்து வந்திருந்த பிரிதொரு கடத்தல்காரருக்கு உதவும் வகையில், கட்டுநாயக்க விமான நிலைய கழிவரையில் தங்கள் காற்சட்டைகளுக்குள் தங்கபிஸ்கட்டுகளை பதுக்கி கடத்த முயற்சிக்கையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது சென்னையைச் சேர்ந்த 27, 30, 43 மற்றும் 30 வயதுகளையுடைய நால்வரே நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களை கைதுசெய்யும் வேளையில் அவர்களிடமிருந்து 1.6 கிலோகிராம் நிறையுடைய 16 தங்க பிஸ்பகட்டுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் இலங்கை பெறுமதி 11,372,270 ரூபாவாகும். 

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் ஆறு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.