2015 இல் தேசிய அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் இலங்கையின் பத்திரிகை சுதந்திர நிலை மேம்பட்டுள்ளது என  பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தனது பட்டியலில் எல்லைகளற்ற நிருபர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் உண்மையான களநிலவரம் வேறு மாதிரியானதாக காணப்படுகின்றது. பத்திரிகையாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அச்சுறுத்தப்படுகின்றனர், பத்திரிகை ஆசிரியர்கள் சுயதணிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர் இது தவிர கண்காணிப்பும் காணப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018 இல் பத்திரிகையாளர்கள் செயற்படுவதற்கான சூழல் பாதுகாப்பானதாக காணப்படுகின்ற போதிலும் கொலைகளும் கடத்தப்படுவதும் இல்லை என்பது பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பிடுவதற்கான பூரணமான சுட்டியாக காணப்படாது.

2009 நடுப்பகுதி வரை காணப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் வன்முறை சூழல் தற்போது எவ்வளவு தீவிரமாக காணப்படுகின்றது என்பதே இலங்கையில் ஊடக சுதந்திரத்தை மதிப்பிடுவதற்கான பொருத்தமான அளவுகோலாக விளங்ககூடும்.

2009 ம் ஆண்டு சர்வதேச பத்திரிகை சுதந்திரம் குறித்த குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் பல பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலிற்கு எதிரான போராட்டம்

இது தொடர்பில் சுயாதீன அலுவலகமொன்று அமைக்கப்படவேண்டும் என சர்வதேச பத்திரிகை சுதந்திரம் குறித்த குழுவேண்டுகோள் விடுத்தபோதிலும் அவ்வாறான அலுவலகமொன்று உருவாகவில்லை. நல்லாட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கமும் இதனை நிறைவேற்றவில்லை.

இதனை விட மோசமான விடயமும் உள்ளது இலங்கையின் நீதிமன்றங்கள் இதுவரை ஒருவரைகூட பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டமைக்காக தண்டிக்கவில்லை என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான   குழு தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளிற்கு பின்னர் பல பிழையான ஆரம்பங்களிற்கு பின்னர் சண்டேலீடர் ஆசிரியரின் படுகொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது நிச்சயமாக வரவேற்கத்தக்க விடயம்.

இதேவேளை தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிரகீத் எக்னலிகொட காணாமல்போனது குறித்த விசாரணையும் முடக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை நீதித்துறை விசாரணை செய்து தண்டிக்க தவறியுள்ளதன் காரணமாக தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் போக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது. மேலும் இது பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறைகளில் சட்ட அமுலாக்கல் பிரிவினர் ஈடுபட்டமை குறித்த விவாதங்களை முடக்கியுள்ளதுடன் யுத்த கால அநீதிகள் குறித்த பகிரங்க விவாதங்களையும் தடுத்துள்ளது.

பாதுகாப்பான சூழல்

அரசியல் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து பத்திரிகையாளர்களும் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது பாதுகாப்பான சூழலில் பணியாற்ற முடிகின்ற போதிலும் தற்போதைய சூழல் என்பது  நாட்டின் ஆயுதமோதல் குறித்து ஆழமாக ஆராய்வதற்கு  உகந்ததாகயில்லை.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினர் இழைத்த அநீதிகள் குறித்து விவாதிப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக காணப்படுகின்றது. எனினும் இந்த விடயம் குறித்து தேசிய அளவில் விவாதிப்பதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்;டுள்ளதன் காரணமாக உண்மை மறைக்கப்பட்டுள்ளதுடன் குழுக்கள் மத்தியிலான மோதல்கள் இடம்பெறும் நிலை உருவாகியுள்ளது, மேலும் தேசிய நல்லிணக்கம் என்பதை வெறுமனே வார்த்தைகளில் மாத்திரம் காணக்கூடிய விடயமாக மாற்றியுள்ளது.

இந்த கசப்பான உண்மைகளை பொதுமக்கள் விவாதிப்பதை தடுப்பதற்காக முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் தற்போதைய தேசிய அரசாங்கமும் வடக்கு, கிழக்கினை தனிமைப்படுத்தியுள்ளன- இராணுவமயப்படுத்தியுள்ளன.

தமிழ் பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர், கடினமான கேள்விகளை கேட்பவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவீர்கள் என்ற அச்சுறுத்தலிற்கு உள்ளாகின்றனர்.

இதேவேளை சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்பகுதியில் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களை சுய தணிக்கைக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை அரசாங்கங்கள் பின்பற்றுகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தமிழ்மக்களின் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றால் அதன் காரணமாக போரில் வெற்றிபெற்றவர்களிற்கான மக்கள் ஆதரவு குறையலாம் அவர்கள் குறித்து எண்ணம் மாறாலாம் என சிங்கள தலைவர்கள் அச்சம் கொண்டுள்ளதன் காரணமாகவே அவர்கள் இந்த விவகாரங்கள் குறித்த தேசிய விவாதங்களை தவிர்த்து தடுத்து வருகின்றனர்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும்  இராணுவ முகாம்களால் சூழப்பட்டுள்ள  வடக்கில் தமிழர்கள் தொடர்ந்தும் படையினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களிற்காக போராடுகின்றனர், அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி நிற்கின்றனர், காணாமல்போனவர்களின் விபரங்களை கோரி நிற்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் தேசிய நல்லிணக்கம் மற்றும் போருக்கு பிந்திய சமாதானம் குறித்த அரசாங்கத்தின் பிரச்சாரங்களிற்கு முரணானவையாக காணப்படுகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திகள் வெளியாவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ள அதேவேளை இந்த ஆர்ப்பாட்டங்களிற்கும் ஏனைய விடயங்களிற்குமான காரணங்களை பத்திரிகையாளர்கள் துருவ ஆரம்பித்தால் அவர்கள் தடுத்துவைக்கப்படலாம் அல்லது அவர்கள் புகைப்படக்கருவிகள் போன்றவறை அழிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் தென்பகுதியில் பத்திரிகையாளர்களை சுயதணிக்கையில் ஈடுபடச்செய்வதன் மூலம் மக்களிற்கு சென்று சேரவேண்டிய செய்தி எது என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்கின்றனர். வடக்கு கிழக்கில் இதே தந்திரோபாயத்தை ஓரளவிற்கு பயன்படுத்தகின்றனர். பதில் அளிக்க முடியாத கேள்விகளை கேட்கும் பத்திரிகையாளர்களை துரோகிகள் என சித்தரிப்பதன் மூலம் அவர்களை அச்சறுத்துகின்றனர்.

கட்டுப்பாடுகள் ஏன் தொடர்கின்றன

இலங்கையில் பத்திரிகையாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்வதற்கான இரண்டு காரணங்கள்

இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள போதிலும் உள்நாட்டு யுத்தம் குறித்த விவாதத்தினை தீர்மானிப்பவர்களாக சிங்கள தேசியவாத உயர் குழாமை சேர்ந்தவர்கள் காணப்படுகின்றனர்- அரசியல்வாதிகள், தொழில்சார்துறையினர், படையினரே இவர்கள்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை  தமிழ் பயங்கரவாதத்தை அழிக்கும் தேசப்பற்று மிக்க செயல் என இவர்கள் சித்தரித்துள்ளதால் இது குறித்த பல்வேறு விளக்கங்கள் வெளியாக கூடிய சுதந்திர ஊடகங்களை இவர்கள் அனுமதிப்பதில்லை.

மேலும் முன்னைய அரசாங்கத்தின் கீழ் முக்கிய பதவிகளை வகித்த இதே உயர் குழாமை சேர்ந்தவர்களே தற்போதைய அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்களை பொறுத்தவரை யுத்தகால அநீதிகள் குறித்து சுதந்திரமான கருத்துப்பரிமாற்றத்திற்கு அனுமதிப்பது அவர்களிற்கே பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இரண்டாவது சர்வதேச சமூகம் யுத்தகால அநீதிகள் குறித்து நடவடிக்கை எடுக்காததற்காக இலங்கை அரசாங்கத்தை தண்டிக்க தவறியுள்ளது.

உதாரணத்திற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015 தீர்மானம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்  பத்திரிகையாளர்களிற்கு எதிரான தாக்குதல்கள் குறித்து விசாரணை அவசியம் என தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தீர்மானத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தாதமைக்காக இலங்கை தண்டிக்கப்படவில்லை.

2009 ம் ஆண்டை விட இலங்கையில் 2017 இல் அதிகளவு  ஊடக சுதந்திரம் காணப்படுகின்றது என எல்லைகள் அற்ற நிருபர் அமைப்பு தெரிவித்துள்ளது நியாயமான மதிப்பீடு

எனினும் உண்மையான உயிர்த்துடிப்புள்ள  பத்திரிகைதுறையை  ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்த சரியாமதிப்பீடில்லை இது.

தமிழில்- அ.ரஜீபன்