ஊவா மாகாணத்தில் ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பதாரிகள் ஊவா மாகாண சபையின் முன்னால் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த  2017ஆம் ஆண்டு மாகாண அரச சேவை ஆணைக்குழுவினால் 505 ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்குவதாக கூறி போட்டிப் பரீட்சை நடைபெற்று ஒரு வருடமாகியும் நியமனங்கள் இது வரை வழங்கப்படவில்லை.

இப் போட்டிப் பரீட்சையில் 3500 பேர் தோற்றியுள்ள போதிலும் 1500 பேர் சித்தியடைந்துள்ளனர்.

இப் போட்டி பரீட்சையில் தவறு இருப்பதாக கூறி ஊவா மாகாணசபையின் மக்கள் விடுதலை முன்னனி உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன நீதி மன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.

இதனால் ஆசிரிய நியமனங்கள் வழங்குவது இடை நிறுத்தம் செய்யப்பட்டது.

குறித்த வழக்கை வாபஸ் பெற்று ஆசிரியர் நியமனங்களை உடன் வழங்கக்கோரியே சாகும் வரை உண்ணாவிரதத்தை விண்ணப்பதாரிகள் மேற்கொண்டுள்ளனர்.