ஆண்டுதோறும் இரண்டரை லட்சம் பேர் புதிதாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அத்துடன் 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 400 மில்லியன் மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அதில் தெற்காசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் 12 சதவீதத்தினராக இருக்கக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவது 25 சதவீதமாக இருக்கிறது என்றும் அந் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விழிப்பு நிலையில் மாற்றம், மூச்சு எடுக்க முடியாமை, பேச்சு வெளிப்படும் முறையில் மாற்றம், மூச்சிரைப்பு, சுவாசிக்கும் எண்ணிக்கையில் மாற்றம், நாடித்துடிப்பு இயல்பை விட அதிகமாதல் போன்றவை இதன் அறிகுறிகளாக கொள்ளலாம். இதற்கு தொடர் சிகிச்சை மற்றும் முழுமையான சிகிச்சையின் மூலம் சீராக்கலாம்.

ஆஸ்துமா பாதிப்பிற்குள்ளானவர்கள் தொடர் சிகிச்சையை இடைநிறுத்தம் செய்தால் இந்த பாதிப்பு மீண்டும் வரக்கூடும். ஒரு சிலருக்கு சிகிச்சை எடுத்த பின்னரும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம். ஒரு சிலருக்கு விட்டுவிட்டு ஏற்படலாம். இரவில் இருமல் அதிகரிப்பு, இருமலும் மூச்சிரைப்பும் அதிகரிப்பது, தூக்கத்தில் எழும் போது சோர்வாக இருப்பது ஆகியவை இந்த நோயின் தீவிரமடைந்திருப்பதன் அறிகுறியாகும்.

மூச்சை அடக்கி சிறிது நேர தியானப்பயிற்சி ஆஸ்துமாவால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும். ஆஸ்துமா நோயாளிகள் சிகிச்சை எடுக்கும் போது அவர்களுக்கு வேறு வகையினதான பாதிப்பு இருந்தால், அதாவது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான மருந்து, மாத்திரைகளை சாப்பிடும் போது மருத்துவர்களின் ஆலோசனையோ அல்லது வழிகாட்டலோ இன்றி சாப்பிடாதீர்கள். ஏனெனில் சில மருந்துகள் ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.

வைத்தியர்  கமல்,

தொகுப்பு அனுஷா.