மைக்ரேன் தலைவலி என்ற பாதிப்பு வராமல் தற்காத்துக்  கொள்ளவேண்டும் என்றால் உணவுப்  பழக்கத்தையும், வாழ்க்கை நடைமுறையை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் .

தற்போதைய இளைய தலைமுறையினர் பணிப்பளு காரணமாக அதிகமான மன அழுத்தம் மற்றும்  மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதே சமயத்தில் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்குவதால்,  தாய் தந்தையர், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் ஏனைய உறவினர்கள் என மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய உறவுகளை மேலாண்மை செய்வதில் தடுமாறுகிறார்கள். அதனால் அவர்கள் இளம் வயதிலேயே மைக்ரேன் தலைவலி, பக்கவாதம், இதயப்  பாதிப்பு போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள். அத்துடன் உடற்பயிற்சி, இயற்கையான உணவுகளைப்  புறக்கணித்தல், செயற்கையான  ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் துரித உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவது, அத்துடன் அதனை அகால நேரத்தில் சாப்பிடுவது போன்றவற்றையும்  தவிர்க்கவேண்டும்.

மூளையிலுள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் தடை அல்லது இழுத்துப்  பிடித்துக் கொள்வதால் தான் மைக்ரேன் தலைவலி ஏற்படுகிறது என்று சொல்லலாம். அதாவது தசைப்  பிடிப்பு என்று குறிப்பிடுகிறோமே அதைப் போன்றது தான். அதாவது  மூளையில் உள்ள இரத்த குழாய்கள் இறுக்கமடைந்துவிடும். இதன் காரணமாக பலரும் தலைவலியுடன் உடலில் வேறு வகையினதான பாதிப்புகளும் தெரியவரும். 

இதற்கு குறைந்த பட்சம் ஓராண்டு கால அவகாசம் வரை சிகிச்சைப் பெறவேண்டும். அத்துடன் மருத்துவர்களின் பரிந்துரையின் படி இதனை வராமல் தற்காத்துக் கொள்வதற்கான சிகிச்சையையும் பெறவேண்டும். தலைவலியைத்தூண்டும் உணவு வகைகளை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.

டொக்டர் சைமன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்