மாத்தளை – கம்மடுவ – ஓப்பல்கல தோட்டம் கீழ் பிரிவு மக்கள்  காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமைக்கு  எதிர்ப்புத் தெரிவித்து  தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். 

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கிய அரசியல் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொழிலாளர் தினத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக மாத்தளை – கம்மடுவ – ஓப்பல்கல தோட்டம் கீழ் பிரிவு மக்கள் தெரிவித்தனர். 

மாத்தளை – கம்மடுவ – ஓப்பல்கல தோட்டம் கீழ் பிரிவிலுள்ள 40 குடும்பங்களுக்கு, 1992 ஆம் ஆண்டு வீடமைப்பு அதிகார சபையினால் தனி வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டன.

இந்த வீடுகளுக்கான ஒரு பகுதி நிதியை அரசாங்கம் வழங்கியதுடன், மிகுதி நிதி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அறவிடும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது. 

குறித்த தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து  நிதி அறவிடப்பட்ட பின்னர், காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் அப்போது வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், வீடுகளுக்காக தாம் செலுத்த வேண்டிய நிதியை முழுமையாக செலுத்தி 5 வருடங்கள் கடந்த போதிலும், இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாத்தளை – கம்மடுவ – ஓப்பல்கல தோட்டம் கீழ் பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.