இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சரவையில் மீண்டும் மாற்றத்தை மேற்கொண்டுள்ள அதேவேளை நாட்டில் நிலவிவரும் அரசியல்ஸ்திரமின்மைக்கு முடிவுகாணப்படும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த இலங்கையின் பங்குசந்தையை சேர்ந்தவர்கள்  அமைச்சரவை மாற்றம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளனர் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ரொய்ட்டர் செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களின் இடத்திற்கும் அமைச்சர்களை நியமித்துள்ளார்.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து விலகியதை தொடர்ந்தே சிறிசேன இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து ஏப்பிரல் 12 ஆம் திகதி சிறிசேன பாராளுமன்றத்தின் அமர்வுகளை இடைநிறுத்திய தருணத்திலிருந்து முதலீட்டாளர்கள் அமைச்சரவை மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர்.

இன்று இடம்பெற்றுள்ள மாற்றங்கள் மேம்போக்கானவை இலங்கையின் பங்குசந்தையை பலப்படுத்தக்கூடிய விடயங்கள் எதுவும் இதில் இல்லை என இலங்கை பங்குசந்தையை சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஆதரவு தரப்பினர் உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து  இலங்கையின் தேசிய அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் இலங்கைக்கு கடன்களை நிதிகளை வழங்குபவர்கள் கோரியுள்ள நிதிகளை ஓழுங்குபடுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க கூடிய நிலையில் அரசாங்கம் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்கு தற்போது அமைச்சரவை மாற்றம் தேவையில்லை நாட்டை மறுகட்டமைப்பு செய்யக்கூடிய சீர்திருத்தங்களே அவசியம் என பத்திரிகையாளர் விக்ட்ர் ஐவன் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.