தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தோட்டம் மற்றும் கட்டுக்கலை தோட்டம் ஆகிய இரு பகுதிகளில் வீட்டு முற்றத்தில் மற்றும் வீட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் தலவாக்கலை பொலிஸாரால் நேற்று ஒருவரும், இன்று ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டுள்ளனர். இதன்போது தலவாக்கலை தோட்ட பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் 6 கஞ்சா செடிகளும், கட்டுக்கலை தோட்டப்பகுதியிலுள்ள வீட்டு முற்றத்தில் பூச்செடியில் வளர்த்த வந்த 2 கஞ்சா செடிகளையும் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் தங்களது வீட்டு முற்றத்திலும், தோட்டத்திலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு அடி உயரமான கஞ்சா செடிகளையும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவரை இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதோடு, நாளை ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.