இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பெய்துவரும் இடியுடன் கூடிய கடுமழையில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகாரின் வடகிழக்கு பகுதியில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருகிறது. அராரியா, புர்னியா, கிஷன்கஞ்ச், சுபால், சுகாரியா, சகர்சா உள்ளிட்ட மாவட்டங்களில் புயலுடன் கூடிய மழை பெய்து வருவதால் பாரியலவிலான பொருட் சேதங்களும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளன.

இடைவிடாது பெய்து வரும் கடும் மழையினால் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தோரில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 இந்நிலையில், விளைநிலங்களில் நீர் சூழ்ந்து பயிர்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன.  கடும் மழையினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.