பிரபல சிங்கள மொழி திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியை அரசமரியாதையுடன் இடம்பெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரபல சிங்கள மொழி திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் தனது 99 ஆவது வயதில் நேற்று இரவு காலமானார்.

அவரது உடல் அஞ்சலிக்காக கொழும்பு – 5 கலாநிதி ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிச் சடங்கு எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி புதன்கிழமை 4 மணிக்கு சுதந்திர சதுர்க்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள திரையுலகின் தந்தையெனப் போற்றப்படும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், சர்வதேச ரீதியில் பிரபல்யமான இலங்கையின் சிங்கள திரைப்படத் துறையில் தனக்கென ஓர் தனி இடத்ததைப் பதித்துக் கொண்ட தாயாரிப்பாளரும் இயக்குனருமாவார்.

கடந்த 1919 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்கையை ஆரம்பித்து பின்னர் 1949 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்குள் பிரவேசித்தார். 

1956 இவரது முதாலாவது திரைப்படமான ரேகவ வெளியானது. இதனைத் தொடர்ந்து சந்தேசய, கம்பெரலிய, கொளுகதவத்த, தாசநிசா, யுகாந்திய, வேகந்தவளுவ போன்ற திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் வெளியான முக்கியமான திரைப்படங்ளாகும்.

இவர் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பல விருதுகளை வென்றுள்ளார். இவரது மனைவியும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது.