மன்னார் - பள்ளிமுனை கடற்கரையில் உள்ள  மீனவர்களின் மீன் வாடிகள் சிலவற்றில் இருந்து இன்று  மாலை தடை செய்யப்பட்ட 'டைனமெற்' வெடி பொருட்களை பயண்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் ஒரு தொகை மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட 'டைனமெற்' வெடி பொருட்களை பயண்படுத்தி மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு இன்று   மாலை தகவல் வழங்கியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட  நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் 4 வாடிகளிலிருந்து 'டைனமெற்' வெடி பொருட்களை பயண்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் என்ற சந்தேகத்தில் ஒரு தொகை மீன்களை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட  மீன்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.