இன்றைய உலகில் உள்ள பல மாநகரங்கள் ஒலிமாசால் பாதிக்கப்பட்டு காது கேளாமையை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஒலியை கேட்பது இயற்கையான விடயம் என்றாலும், மனிதர்களின் கேட்கும் திறனுக்கு ஒரு எல்லை உண்டு. ஒருவர் எண்பது டெசிபல் அளவிற்கு எட்டு மணி நேரம் வரையும், 85 டெசிபல் அளவிற்கு நான்கு மணி நேரம் வரையும், 90 டெசிபல் அளவிற்கு இரண்டு மணி நேரம் வரையும்இ 95 டெசிபல் அளவிற்கு ஒரு மணி நேரம் வரையும், 100 டெசிபல் அளவிற்கு முப்பது நிமிடங்கள் வரையும், 105 டெசிபல் அளவிற்கு பதினைந்து நிமிடங்கள் வரையும், 110 டெசிபல் அளவிற்கு எழுப்பப்படும் ஒலியை ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரம் வரையும் கேட்கலாம்.

ஆனால் இவையனைத்தையும் ஒரே நேரத்தில் கேட்டால் காது கேளாமை ஏற்படுவது உறுதி. அத்துடன் உடலின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு ஆரோக்கிய கேடு உண்டாகுவதும் உறுதி என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவிலும், இரத்த அழுத்தத்தின் அளவிலும் மாறுபாடு ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்தும். அதனால் நாம் கேட்கும் ஒலி அளவுகள் குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தும் அட்டவணையை உறுதியாக பின்பற்றவேண்டும். இதன் மூலம் ஒலி மாசால் காதின் கேட்கும் திறன் பாதிக்கப்படுவது குறையும்.

எப்போதும் பகலிலும், இரவிலும் 40 டெசிபல் முதல் 45 டெசிபல் அளவு வரையிலான ஒலியளவை மட்டுமே கேட்கவேண்டும். இது தான் இயல்பானது. ஒலிமாசால் அதிகம் பாதிக்கப்படுவது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவலர்கள் என்றும், இதனைத் தொடர்ந்து மக்கள் தொடர்பில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் தவறாமல் ஆண்டு தோறும் தங்களின் கேட்கும் திறன் குறித்தும், காதுகளின் செயல்பாடுகள் குறித்து பரிசோதித்து கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வைத்தியர் வேணுகோபால்

தொகுப்பு அனுஷா.