காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் இலக்கிய கூட்டமைப்பின் சார்பில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் இலக்கிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வா.மு சேதுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கவிஞர் மு மேத்தா, சிலம்பொலி செல்லப்பன், அரு கோபாலன், சேம நாராயணன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்குபற்றினர்.

செய்தியாளர்களிடம் வா மு சேதுராமன் தெரிவித்ததாவது..

"சங்க காலம் தொட்டே காவிரி நீரின் பெருமையும், அதன் பங்கீடும் வரலாற்றில் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் சட்ட நெறிமுறைகளை மீறி காவிரியின் குறுக்கே அணைகளை கட்டி கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.

பல இடர்பாடுகளை கடந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அதை செய்யவில்லை. ‘ஸ்கீம்’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டும், கர்நாடகா மாநில தேர்தலை மனதில் வைத்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு பெரும் துரோகம் புரிந்து வருகிறது.

சர்வாதிகாரி போல செயல்பட்டு வரும் மோடி தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். தமிழகத்தின் தனித்தன்மை இனியும் குலையாமல் இருக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும்.’"என்றார்.