எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நற்சான்றிதழ் அளித்திருப்பது சந்தேகமளிக்கிறது என்று தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது...

"தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மக்களாட்சி மாண்புகளுக்கும், மரபுகளுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராக செயல்படுவதை கண்டித்து, ஆளுநர் வருகை தரும் மாவட்டங்களில் தி.மு.கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆங்கில நாளேட்டுக்கு சிறப்புப்பேட்டி அளித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ‘எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஆட்சி திருப்திகரமாக நடைபெறுகிறது’, என்று ‘நற்சான்றிதழ் வழங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்திருக்கிறது. 

தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை செய்ய அனுமதித்ததில் இருந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம் வரை அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் ரெய்டுகளுக்கு உள்ளாகி, ஆதாரங்களுடன் அம்பலப்பட்டு நிற்பதை, ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களே முழுவதையும் தெரிந்து வைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்களுக்கு ஆதாரம் இல்லை என ஆளுநர் பேட்டியளித்திருப்பது ஆச்சரியமானது மட்டுமல்ல உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு, பத்திரிகை பேட்டி என்று பல்வேறு விவாதப் பொருள்களை அவரே தொடர்ந்து உருவாக்குவதன் பின்னணியைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை. ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல. அவர் மத்திய அரசின் நியமனப் பிரதிநிதி மட்டுமே. அதனால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் பெற்றுத் தருமாறு தி.மு.க.வும், தோழமைக் கட்சியினரும் ஆளுநரை நேரில் சென்று வலியுறுத்தினோம்.

ஆனால் தமிழகத்தின் ஆளுநராக அவர் பொறுப்பேற்றதிலிருந்து தான் மத்திய அரசின் பிரதிநிதி மட்டுமே என்பதை மறந்து மாநில அரசின் அதிகாரத்திற்கும், அமைச்சரவை கூட்டுப் பொறுப்புக்கும் சவால்விடும் வகையில் தன்னிச்சையாக பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் பணியாற்றிய பெண் பேராசிரியர் ஒருவர், ஆளுநரைக் குறிப்பிட்டு மாணவிகளிடம் பேசிய ஆடியோ அம்பலமாகி, யாரும் கோரிக்கை வைக்காமலே ஆளுநர் தன்னிச்சையாக, அவசரமாக நியமித்த விசாரணைக் குழுவும், தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. பிரிவும் மேற்கொண்டு வரும் விசாரணை குறித்து வகைவகையான செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. 

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசுடன் சமரசம் செய்துகொண்டு ஆட்சியாளர்களை மகிழ்வித்திடும் வகையில் ‘நற்சான்றிதழ்’ வழங்கி ஆளுநர் பன்வாரிலால் பேட்டி அளித்திருப்பதும், அந்தப் பேட்டியில் மே மாதம் வரை தன்னுடைய ஆய்வுப்பணியை ஒத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருப்பதும், பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன.

மாநிலத்தில் நிதி மேலாண்மை படுமோசமாகி நிதி நெருக்கடி நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் கண்டும் காணாதவராக அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் வேறு ஏதோவொரு எதிர்பார்ப்புடன் கூடிய அவரது தனிப்பட்ட உள்நோக்கத்தை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது.

இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் கருத்து என்பதையும், ஆளுநர் அதிசயமானதும், ஆரோக்கியக் குறைவுள்ளதுமான சில முன்மாதிரிகளை உருவாக்கி வருவதையும் தி.மு.கழகம் கண்டனத்துடன் பதிவு செய்திட விரும்புகிறது." என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.