கர்ப்பக் காலத்தின் போது அதிகரிக்கும் சர்க்கரையின் அளவால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பிறக்கும் ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு உண்டாகிறது என்று அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக மகப்பேற்று வைத்திய நிபுனர் சேஷய்யா தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது குறித்து வைத்திய நிபுனர் சேஷய்யா கூறும் போது,

"கர்ப்ப காலத்தின் போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிரந்தரமாக சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு இருபது மடங்கு வாய்ப்பு  அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக அந்த பெண்ணிற்கு பிறக்கும் குழந்தைக்கும் சர்க்கரை நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. உலகளவில் கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் ஏழில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

தெற்காசியாவைப் பொறுத்தவரை கர்ப்பிணி பெண்களில் 17 சதவீதத்தினருக்கு மேல் பேறு காலத்தின் போது சர்க்கரைநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் கருவுற்ற தாய்மார்கள் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, பேறு காலத்தின் போது சர்க்கரையின் அளவைக் கண்டறிந்து, அதனை மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவேண்டும்.

அப்போது தான் அடுத்த தலைமுறையை சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்க இயலும்." என கூறினார்.

தொகுப்பு அனுஷா,