இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் தொழில் வாய்ப்புக்களை தேடித்தரும் தளமான DreamJobs.lk ஆனது, 2017ஆம் ஆண்டில் 63% வீதத்திற்கும் அதிகமான பயனர்கள் தமது திறன்பேசிகள் ஊடாக வலைத்தளத்தை பார்வையிட்டுள்ளதாகவும், கடந்தாண்டின் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் 11.5% வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

2018 இன் இறுதியில் 76% வீதத்திற்கும் அதிகமான பயனர்கள் திறன் பேசிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவிலும், இலங்கையிலும் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்ப மேம்படுத்தல்களை பயன்படுத்தவும், கையாளவும் எதிர்பார்த்திருக்கும் தொழில் தருநர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகிய இருவருக்குமான தொழில்நுட்ப ஆர்வமுள்ள தொழிற்சந்தையை நோக்கிய மிகப்பெரிய இயக்கத்தின் அங்கமாக இப் போக்கு(trend) அமைந்துள்ளது.

இந்த குறிப்பிட்ட போக்கிற்கு இணையாக, இரு தளங்களிலும் திறன்பேசி செயலிகளை வெளியிட்டு இலங்கையின் முதலாவது மிகப்பெரிய ஒன்லைன் தொழில் வாய்ப்புக்களைத் தேடித்தரும் தளமாக உருவாகக்கூடிய வகையில் தனக்குச் சொந்தமாக iOS மற்றும் அண்ட்ரொயிட் திறன்பேசி செயலிகளை DreamJobs.lk கொண்டுள்ளது.

www.dreamJobs.lk என்பதை தேடுவதனூடாக இந்த செயலிகளை தற்போது கூகுள் ப்ளே மற்றும் அப்பிள் iTunesகளில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடியதாகவுள்ளது. 

"தொழில்நுட்ப ஆர்வம், பல்துறை மற்றும் சுயாதீன பணியாளர்களை எதிர்பார்க்கும் தொழில்தருநர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் இலங்கையில் தொழில் தேடுபவர்களின தொழில்நுட்ப புதுமை மற்றும் திறமை அதிகரித்துள்ளமையினால் இன்னமும் அபிவிருத்திக்கான வழிகள் தென்பட்ட வண்ணமுள்ளன. இலங்கை அதன் முழுமையான அபிவிருத்தியைப் அடைந்துகொள்ளுவதற்காக திறன் பற்றாக்குறை மற்றும் இளைஞர்களின் செயல்பாடின்மை குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் நிலவுகின்றமை போன்ற தொழிற்சந்தை பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டிய ஒருசில சவால்களாக காணப்படுகின்றன.

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையானது, மென்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி அபிவிருத்தி, இணைய விடயங்கள்(loT) மற்றும் க்ளவுட் கணினிக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் அதிகப்படியான வளர்ச்சியை அனுபவிக்கவுள்ளதாக நாம் கணித்துள்ளோம். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைச் சாராத நிறுவனங்களும் கூட திறமை, டிஜிட்டல் புதுமையை உள்வாங்குவதற்கான திறன், மென் திறன்கள், நம்பகத்தன்மை மற்றும் சுய கல்வி கற்பவராக வெற்றியடைவதற்கான திறன் ஆகிய தகுதியைக் கொண்டிருப்பவர்களையே தேடுகின்றனர்" என DreamJobs.lk  நிறுவனத்தின் பொது உறவுகள் பிரிவின் முகாமையாளர் பிரியங்க பெரேரா தெரிவித்தார்.   

இலங்கையில் தொழிற்சந்தை வளர்ச்சியின் பின்னடைவுக்கு மிகப் பிரதான தடையாக தற்போதைய கல்வி முறையின் தேக்கநிலை மற்றும் தடைகளே காரணமாகவுள்ளன. இதன் காரணமாகவே மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரக் கேள்விகளுக்கமைய தம்மை சீர்செய்து கொள்ள வேண்டிய நிலைமையை தற்போதுள்ள ஊழியர் படை முகங்கொடுத்து வருகிறது. 

இதற்கு மேலதிகமாக, இந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் வகையில் 15-24 வயதுக்குட்பட்ட அதிகளவான இளைஞர்கள் வேலையிலோ, கல்வியிலோ அல்லது பயிற்சிகளிலோ ஈடுபடாமையும் இலங்கையின் மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படுகிறது. இந்நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக, கல்வி மற்றும் பயிற்சியில் PPPs(அரச தனியார் பங்குடமைகள்) களை உருவாக்கும் அரச தலைமையிலான வசதிப்படுத்தல் மற்றும் குறிப்பிட்ட திறன்களுடன் பணியாளர்களைத் தேடும் தொழில் தருநர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான பொதுவான தளமொன்றை DreamJobs.lk  போன்ற தொழில் தரும் நிறுவனங்கள் வசதிப்படுத்தல்களை முன்னெடுக்குமாறு வேண்டப்படுகிறது. 

DreamJobs.lk  நிறுவனமானது, சமூக வலைத்தளத்தில் செயற்திறன் மிக்க சுய விபரக்கோவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், ஆயிரக்கணக்கான இலங்கைத் தொழில் தருநர்கள் தங்களது நிறுவனங்களுக்கு மிகவும் திறமையுள்ளவர்களைக் கண்டறிவதற்குமான உதவிகளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை ஒன்றினைப் பயன்படுத்தி வருகிறது.