கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிகரெட் கம்பனிக்கெதிராக வாசகங்கள் பதித்த  பதாதைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் தாய்மார்கள் என ஆயிரக்கணக்கானோருடன் சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட சர்வமதத் தலைவர்கள்,

“இலங்கையில் சிகரெட் பாவனையினால் நாளொன்றிற்கு சராசரியாக 72 பேர் உயிரிழக்கின்றனர். அதாவது வருடத்திற்கு 25000 – 26000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

மேலும் ஆயிரக்கணக்கான பெண்களின் கணவர்மார்களையும் பிள்ளைகளின் தந்தைகளையும் கொலை செய்யும் கொலை கார சிகரெட் கம்பனியானது தங்களது இலாபத்தில் 92சத வீதத்திற்கு அதிகமான தொகையை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் முதலீடு செய்கிறது.

இலங்கையர்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை பொய்களை கூறி மக்களை ஏமாற்றி சூரையாடும் சிகரெட் கம்பனியின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்றாகும்.

மக்களின் துயரங்களை கருத்தில் கொள்ளாது அதிக இலாபத்தை மட்டுமே நோக்காக கொண்டு செயற்படும் சிகரெட் கம்பனிக்கு எங்களின் கண்டனத்தை தெரிவிப்பதற்காகவும் இவர்களால் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவுமே இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளோம்.” என தெரிவித்தனர்.