ஐந்து பேர் கொண்ட றொஹிங்கியா குடும்பமொன்றை நாட்டுக்கு திருப்பியழைத்திருப்பதாக மியன்மார இம்மாத ஆரம்பத்தில் செய்த அறிவிப்பு றொஹங்கியா அகதிகளினால் எதிர்நோக்கப்படுகின்ற மனிதாபிமான நெருக்கடியின் பாரதூரத்தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. 2017 ஆகஸ்டுக்குப் பிறகு மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் தங்களது வீடுவாசல்களைக் கைவிட்டு சுமார் 7 இலட்சம் றொஹிங்கியாக்கள் பங்களாதேஷுக்குள் சென்று தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களை நாட்டுக்குத் திருப்பியழைப்பது தொடர்பில் இரு நாடுகளுமே கடந்த வருடப் பிற்பகுதியில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டன. ஆனால், ஐவர் கொண்ட குடும்பத்தை திருப்பியழைத்திருப்பதாக மியன்மார் கூறுவதை பங்களாதேஷ் நராகரித்திருக்கிறது. அந்த ஐவரும் தனது பிராந்தியத்துக்குள் வந்திருக்கவில்லை என்பதால் அவர்களை நாட்டுக்குத் திருப்பியழைத்திருப்பதாக மியன்மார் கூறுவது பொருத்தமானதல்ல என்று பங்களாதேஷ் கூறுகிறது.  இந்த ஐவர் விவகாரம் தொடர்பில் தனது அதிகாரிகளினால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட  கூற்றையே கடந்தவாரம் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா லண்டனில் திரும்பவும் கூறினார். மியன்மார் அதன் சொந்தப் பிரஜகளை திருப்பியழைத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நெருக்குதலைக் கொடுக்கவேண்டும் என்று சர்வதேச சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

   மியன்மாரில் கொடுமைக்கு ஆளாகின்ற றொஹிங்கியாக்கள் மிகுந்த இடர்பாடுகளுக்கு மத்தியில் பல வருடங்களாக நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆகஸ்டில் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் வெளியேறுவதற்கு முன்னதாக ஏன்கெனவே பங்களாதேஷில் 2 இலட்சம் அகதிகள் இருந்தார்கள் என்று ஐக்கிய நாடுகள் கணிப்பிட்டிருந்தது. பெரும்பாலான அகதிகள் கொக்ஸ் பஜார் பகுதியிலேயே குவிந்திருக்கிறார்கள். அகதிகளின் தேவைகளைக் கவனிப்பதில் பங்களாதேஷ் முன்னணியில் நின்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அத்துடன் அகதிகள் தங்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வதற்கு உகந்த சூழ்நிலையை மியன்மாரைக் கொண்டு  உருவாக்கும் முயற்சிகளையும் டாக்கா செய்துகொண்டிருக்கிறது. அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களைப் பலப்படுத்துவதிலும் பெருமளவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களை வரவிருக்கும் மழைகாலத்துக்கு முன்னதாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதிலும் உதவிப்பணியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

  உலக நாடுகள் இந்த றொஹங்கியா அகதிகளின் நெருக்கடியைத் தணிக்க பெரும் உதவிகளைச் செய்யவேண்டும். குறிப்பாக அயல்நாடான இந்தியாவுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. இந்தியாவில் 40 ஆயிரம் றொஹிங்கியா அகதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

  அகதிகள் திரும்பிச் செல்லக்கூடியதான சூழ்நிலையை மியன்மாரில் உருவாக்கமுடியுமென்று எவருமே நம்பிக்கை வைக்கக்கூடியதாக இல்லை. அதுவே இந்த மனித உரிமைகள் நெருக்கடியில் உலகம் எதிர்கொள்கின்ற பெரிய பிரச்சினையாகும். அகதிகள் சுயமாக, பாதுகாப்பாக, கண்ணியமான முறையில் திரும்பிச் செல்வதற்கான சூழ்நிலை மியன்மாரில் இல்லை என்று  அண்மையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. வெறுமனே பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அகதிகள் திரும்பிச் செல்வதற்குப் போதுமானதல்ல என்றும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது.

  றொஹிங்கியாக்களின் சட்டபூர்வமான அந்தஸ்திலும் மியன்மாரில் அவர்களின் பிரஜாவுரிமையிலும் ராக்கைன் மாகாணத்தில் அவர்களின் அடையாளத்திலும் முன்னேற்றகரமான நகர்வு ஏற்படவேண்டியது முக்கியமானதாகும். பெரும்பாலும் முஸ்லிம்களாக இருக்கின்ற றொஹிங்கியாக்களை தனியான இனக்குழுமமாக அங்கீகரிக்க மறுக்கும் மியன்மார் அவர்களுக்குப் பிரஜாவுரிமையை மறுக்கிறது. வங்காளிகள் என்று றொஹிங்கியாக்கள்தங்களை அடையாளப்படுத்தலாம் என்ற மாற்றுத் தெரிவை மியன்மார் முனவைக்கிறது. ஆனால் அவ்வாறு அவர்கள் செய்தால் மியனமார் வாசிகள் என்ற அவர்களின் உரிமைக்கு பாதிப்பாக அமைந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. மியன்மார் அதிகாரிகள் றொஹிங்கியா என்ற சொல்லைக் கூட பயன்படுத்துவதில்லை. இது உண்மையிலேயே ஒரு இனச்சுத்திகரிப்பாகும்.

  அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் ஜனநாயக மாற்றத்துக்காகப் பெரிதும் பாராட்டப்பட்ட மியன்மார் பல தலைமுறைகளாக ராக்கைனில் வாழ்ந்துவந்திருக்கும் றொஹிங்கியா மக்களின் பூர்வீக உரிமையை அங்கீகரிக்கவேண்டுமென்று பிரயோகிக்கப்பட்ட நெருக்குதல்கள் பயனதரவில்லை. பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா கடந்தவாரம் லண்டனில் கூறியழதப் போன்று சர்வதேச சமூகம் மியன்மார் மீதான நெருக்குதலை அதிகரிப்பதே நியாயமான காரியமாக இருக்கும்.

வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்