பெண் ஊடகவியலாளர்களைப் பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக விசாரணை நடத்திய பின் எஸ் வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக பா ஜ க தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

"தெரிந்தோ தெரியாமலோ எப்படியிருந்தாலும் பெண்களை இழிவுப்படுத்தியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த செயலால் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

இது பற்றி விசாரிக்க முன்னாள் மாநில தலைவர் கே.என் இலட்சுமணன் தலைமையில், துணை தலைவர் நாகராஜன் உட்பட மற்றும் 2 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விசாரித்து அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் எஸ்.வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்." என்றார்.

இதனிடையே பெண்களைப் பற்றி அவதூறான கருத்தினை வெளியிட்டது தொடர்பாக எஸ்.வி சேகர் மீது பொலிஸார் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

தலைமறைவாகியிருக்கும் எஸ்.வி சேகரை கைது செய்ய பொலிஸார் தேடி வருகிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.