கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக மூன்று மாதகாலமாக தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூவர் திஸ்ஸமாராமை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் இன்று சரணடைந்துள்ளனர். 

சரணடைந்த குறித்த  மூவரையும் திஸ்ஸமாராமை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உதயங்கனி ராஜபக்ச எதிர்வரும் மே மாதம் 2ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் சானக்க அமில ரங்கன , பிரபாத் புத்திக்கர, பிரபாத் சன்ஜய ஆகியோயோரே  நீதிமன்றத்தில் சணைடைந்த பின்னர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி இரவு கதிர்காமத்தைச் சேர்ந்த பதிரனகே நிரோஷன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கோரப்பட்ட போதிலும் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்காமல் சென்றதினால் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்ததினால் குறித்த நபர் ஸ்தலத்திலேயே பலியாகினார்.

குறித்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தை தாக்கியதுடன் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

இச் சம்பவத்தையடுத்து பொலிஸார் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக மேலும் மூவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் குறித்த மூவரும் தலைமறைவாகியிருந்தனர்.

கடந்த 3 மாத காலமாக தலைமறைவாகியிருந்த மூவருமே நேற்று சரணடைந்துள்ளனர்.