கேள்வி: விமர்சகர்களை விட்டு விடுவோம் .இந்த வணிக சமரசங்கள் உங்களுக்கு வியாபார ரீதியாக சாதகமான பலன்களைப் பெற்றுத் தந்தனவா ?

சுப்ரமணியபுரம் படப்படிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே என்னுடைய படத்திற்காக  நடிகர் ஜெய்யை  நான் ஒப்பந்தம் செய்தேன். அதற்கு அடுத்த படமாக வர வேண்டிய படம் அவள் பெயர் தமிழரசி. ஆனால், அவருடைய வரிசையான மூன்று தோல்விப் படங்களுக்குப் பிறகே என்னுடைய படம் வெளிவந்தது. படத்தை தயாரித்த நிறுவனத்திற்கும் வரிசையாக சில படங்கள் தோல்வியடைந்தன. 

இந்த கால கட்டத்தில்தான் நடிகர் ஜெய் தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் ”வாமனனைத்” தவிர எல்லாப் படங்களும் தோல்வியடையும் என்று அவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிகை ஒரு பேட்டியை வெளியிட்டது (வாமனன் பெரும் தோல்வியடைந்தது).இப்படியான பல காரணங்கள் படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் வியாபாரத்தைப் பல வழிகளிலும் பாதித்திருந்தன என்பதுதான் உண்மை. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு அடுத்த படமாக என்னுடைய படம் வந்திருந்தால்  நடிகர் ஜெய்க்கான அப்போதைய ஒரு வசீகரத்துக்காகவாவது சிறிய வரவேற்பு கிட்டியிருக்கும். வசூல் ரீதியாக சிறப்பான இடத்தை அடைந்திருக்கும். 

கேள்வி: பால்யகால சினேகிதி , அவள் பற்றிய நினைவேக்கம் , அவளைத் தேடியலைதல் என்ற  வழக்கமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் ‘தோற்பாவைக் கூத்துக்’ கலை பற்றி நம்பகத் தன்மையுடன் பேசிய படம் என்ற வகையில் ‘அவள் பெயர் தமிழரசிக்கு’ குறிப்பிடத் தகுந்ததோர் இடமுண்டு . இக் கலை பற்றிய விபரங்களை எவ்வாறு சேகரித்தீர்கள்? கள ஆய்வுகள் எவையேனும் செய்தீர்களா ?

 தமிழ் நாடு முழுவதும் இருக்கிற பல தோல் பாவைக்கூத்து கலைஞர்களைச் சந்தித்துப் பேசினேன். பேராசிரியர் மு.ராமசாமி (ஜோக்கர் படத்தில் நடித்தவர்) அ.கா. பெருமாளின் சில புத்தகங்கள் போன்றவற்றில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முதல் கட்ட திரைக்கதையை எழுதினேன். இயக்குனர் ரமணி அவர்களின் ஆவணப்படம், வட இந்தியா மற்றும் கேரளாவில் எடுக்கப்பட்ட சில ஆவணப்படங்கள் உதவியாக இருந்தன, விருதுநகர் அருகேயுள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்த மறைந்த தோற்பாவைக்கூத்துக் கலைஞர் திரு.முருகன் ராவும் கோவில் பட்டியைச் சேர்ந்த கலைஞர் லட்சுமண ராவும் பல அரிய தகவல்களைக் கூறி உதவினார்கள்.

குன்னாங்க்குண்ணூர் செல்வம் களப்பணிகளில் உடனிருந்து தகவல் சேகரிக்க உதவினார். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலே அவள் பெயர் தமிழரசிக்கு முதல் தூண்டுதலாக இருந்தது மாற்று சினிமா, சமாந்தர சினிமாக்களைப் பார்க்கிற பார்வையில் மைய நீரோட்ட சினிமாவைப் பார்க்கக் கூடாது,முழுக்க முழுக்க வர்த்தகமாக மட்டுமே இயங்கும் வழக்கமான சினிமாக்களில் இது போன்ற விசயங்களைப் பேசுவதில் தான் பெரும் சவால் இருக்கிறது அதற்கே நிறைய இழக்க வேண்டியிருக்க்கிறது.

கேள்வி: நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்கள் இரண்டாவது படமான ‘விழித்திரு’ வெளியானது . இந்தத் தாமதத்துக்கான காரணம் என்ன ?

அவள் பெயர் தமிழரசி முக்கியமான திரைப்படம் என்று  பரவலான பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும் அடுத்த படத்திற்கான வாய்ப்புகள் உடனே கிடைக்கவில்லை. ஒரு நிலையில் நானே தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் கதை நாயகனாக நடித்து ஒரு புதுமுக இயக்குனர் இயக்குவதாக இருந்தது. பிறகு அதை கைவிட்டு  நண்பர்களுடன் இணைந்து 2012ல் ‘விழித்திரு’வை துவங்கினோம். முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கும் திட்டமேயிருந்தது. 

சினிமாவில் அப்போது புதுமுகங்களுக்கு தொலைக்காட்சி உரிமை விற்பனை இல்லாத நிலைமையிருந்தது. புதுமுகங்களின் படங்களைப் பெரிய தயரிப்பு நிறுவனத்தைத் தவிர எவர்  வெளியிட்டாலும் திரையரங்குகள் கிடைக்காது என்கிற நிலையும் இருந்தது. அதனால் அப்போது வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்த ‘கழுகு’ படத்தில் நடித்திருந்த கிருஷ்ணாவை அணுகினேன், அவர் என்னுடன் பணிபுரிவதற்கு உடனே ஒத்துக்கொண்டார். 

விதார்த், தன்ஷிகா, தம்பி ராமய்யா என்று எல்லோரையும் தெரிந்த முகங்களாக ஒப்பந்தம் செய்தோம். ஒரு வகையில் அவள் பெயர் தமிழரசியில் உருவான அனுபவங்களே எல்லா வித்திலும் இயக்கியது. தனியாக அலுவலகம் பிடிப்பது முதல் படத்திற்கு தேவையான நடிகர் நடிககைகளை ஓரளவுக்கு தெரிந்தவர்களாக ஒப்பந்தம் செய்தது வரை  என எல்லாமே அப்படித்தான். படத்தில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் மூலமாக ஒரு பெரிய தொகை வருவதாக இருந்தது. அது கடைசி வரையிலும்  வரவில்லை. 

.ஆனால், அதை நம்பி வெளியே ஒருவரிடம் பணம் வாங்கினேன். அதிலிருந்து மீண்டு வர முடியாதபடி பெரிய இடியாப்பச்சிக்கலையும் அவருடைய வாக்குறுதி உருவாக்கி விட்டது . இப்படியான பல போராட்டங்களுக்குப் பிறகு 2015லேயே படம் முடிந்தும் விட்டது. இதற்கிடையில் நடிகர் கிருஷ்ணா நடித்து வெளியான அனேகப் படங்களும் பெரும் தோல்வியைத் தழுவின. டி.வி சேனல்கள் புதிய  படங்களை வாங்குவதை நிறுத்திக்கொண்டன. சிறிய தொகையை முன் பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியவரால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் போனது. 

இரண்டரை வருடம் இழுத்தடித்தார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். இயக்குனர் கலைப்புலி தாணு மற்றும் விஷால் என இரண்டு தலைமையும் மாறி மாறி பஞ்சாயத்து செய்தார்கள். இதற்கிடையில் படத்தைப் பார்த்து பிடித்துப்போன இரண்டு பெரிய தயாரிப்பாளர்கள் வெளியிடுவதற்கு முன் வந்த போதும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் அனுமதிக்க வுமில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடையாய் நடந்து களைத்துப்போனேன். இயக்குனர் திரு. விக்ரமன் தலைமையிலான இயக் குனர் சங்கம் எனக்காக இப்பிரச்சினயில் தலையிட்டது.

பல கட்ட பேச்சு வார்த்தைகளின் முடிவில் சென்ற அக்டோபர் 6ஆம் திகதி படத்தை வெளியிட்டு விடுவோம் என்று சங்கத்தின் முன் வாக்குறுதி யளித்தார்கள். வெளியீட்டு வேலைகள் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கும் போது தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து தமிழ் நாட்டு அரசின் வரிக்குறைப்பிற்காக  வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். அது நல்ல ஓரு திகதியாக இருந்தது. மாற்றுத் திகதியான நவம்பர் 3 ல் வெளியீட்டிற்கான தீவிர வேலைகளில்  நானும் எனது குழுவினரும் ஈடுபட்டிருந்தோம்.  வெளியீட்டுக்கு முதல் நாள் இரவில், எங்களால்  வெளியீடு செய்ய முடியாது, பணமில்லை என்றும் எனக்கு செட்டில் செய்யவும் முடியாது என்று தலையில் தீயை வாரிக்கொட்டினார்கள். 

மூன்றாவது முறையும் வெளியீடு செய்ய முடியமல் தள்ளிப் போனால் படத்தின் மீதான மதிப்பு முற்றிலுமாய் குலைந்து விடும் என்று  தெரிந்தது. நானும்  என்னுடைய நண்பரும் மிகவும் போராடி ஓர் இரவுக்குள் ஒண்ணே கால் கோடி வரை பணம் புரட்டி அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்தி படத்தை வெளியிட்டோம். விதி வலியது. இயற்கையும் சதி செய்து எங்களைக் கை விட்டது. அந்த வாரம் முழுவதும் பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வர முடியாத அளவிற்கு அடை மழை கொட்டித் தீர்த்தது. எங்கள் கண்ணீரிலும் மழையிலும் ஐந்து வருட கால உழைப்பு கரைந்து போனது. 

ஒரு வைராக்கியம் காரணமாகத் தயாரிப்பில் ஈடுபட்ட எனக்கு  இப்படி வரிசையாக சறுக்கல்கள்.  கடைசி வரையிலும் விதி துரத்திக்கொண் டேயிருந்தது..  வேலை நிறுத்தம் அறிவிக்கப்படாமல் அக்டோபர் ஆறாம் திகதியன்று படம் வெளியாகியிருந்தால்  நிச்சயம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டேன்.

எல்லாக் காலங்களிலும் பொதுச் சடங்குகளுக்காக எளியவர்களின் தலைகளே பலி பீடங்களில் உருள்கின்றன. விழித்திரு படத்திற்கு  இழைக்கப்பட்ட துரோகங்களையும் அநீதியையும் புத்தகமாக எழுதினால் இன்னொரு ‘துலாபாரமாக’ இருக்கும். அப்படி எழுதுகிற எண்ணமும் இருக்கிறது.யாரோ ஒருவன் ஆடுகிற சூதாட்டத்திற்கு யாரோ ஒருவன் பணயமாகாமல் இருக்க அது பேருதவி செய்யும்.

கேள்வி: ‘அவள் பெயர் தமிழரசி’ யில் இருந்த கவித்துவமும் , எளிமையும் ,இயல்புத் தன்மையும் ‘விழித்திரு’ வில் நழுவிப் போய் விட்டது போல் உணர்ந்தேன். இரண்டு படங்களுக்குமிடையில் காலத்தால் மட்டுமில் லாமல் , வெளிப்பாட்டு முறையாலும் பெரும் வித்தியாசங்களை உணர முடிந்தது . ‘ட்ரென்ட் ‘ என்ற ஓர் ஈர்ப்பில் நீங்கள் இன்னொரு பக்கம் நகர்ந்து விட்டதைப் போலுள்ளது. மெக்ஸிக்கன் இயக்குனர் அலெசா ன்ட்ரோ கொன்ஸலெஸ் இனாரிட்டு(Alejandro González Iñárritu )போன்ற இயக்குனர்களின் வெளிப்பாட்டு முறை உங்களுக்கு வசீகரமளித்திருக்கக் கூடும் . அந்தப் போக்கை , ட்ரென்ட்டை நீங்களும் பிரதிபலித்தீர்களா?

அடிப்படையில் நான் ஒரு சிறந்த கதை சொல்லியாக இருக்க விரும்புகிறேன். ஒரே வகையான படத்தயாரிப்பிலும் கதை சொல்லல் முறையிலும்  சிலந்தி யைப் போல் அடைபட்டுக் கிடக்க விரும்பவில்லை. படைப்பாளிக்கென்று எந்த தனித்துவமும் கிடையாது. ஆனால், படைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று  வேறுபட்டு தனித்துவமாக நிற்கிறது.அதைப் புரிந்து கொள்ளாமல்  தனக் கென்று மட்டுமே  ஒரு நிலையான தனித்துவம் இருப்பாதாய் நினைக்கிற படைப்பாளிகளின் படங்கள் சீக்கிரத்திலேயே கிளிஷேயாக மாறி விடுகின்றன .நான் அதை விரும்பவில்லை. 

‘அவள் பெயர் தமிழரசி’ அதன் தன்மையில் இயல்பிலேயே ஒரு தனித்து வத்தைக் கொண்டிருந்தது. அந்த கவித்துவமும் எளிமையும் அத் தனித்து வத்தால் வெளிப்பட்ட ஒன்று. அந்தப் படத்தில் சூழல் மட்டுமே வில்லனாக இருந்ததற்கும் விழித்திருவில் வில்லன் கதாப்பாத்திரம் ஒன்று இருந்த தற்குமான வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே சொல்லியது போல சமரசமில்லாமல் ,விரும்பிய ஒரு சினிமாவை உருவாக்கு வதற்கான ஒரு இடத்தை நோக்கி நகர்வதே தீர்வு என்கிற நிலைப்பாட்டிற்கு உந்தப்பட்டேன். 

பொருளாதார ரீதியான வெற்றிகள் மட்டுமே அதற்கான அடித்தளங்களை உருவாக்கும் எனத் தோன்றியது.  அவள் பெயர் தமிழரசி படமும் அதற்கு  முன்பிருந்த என்னுடைய செயல்பாடுகளும் ஒரு வலிமையான இமேஜை என் மீது உருவாக்கியிருந்தது. மீரா கதிரவன் மைய நீரோட்ட சினிமாவுக்கான ஆள் இல்லை. கலா பூர்வமான படங்களைத் தவிர மீரா கதிரவனால் வேறு சினிமாவைச் செய்ய முடியாது என்று என் காது படவே பேசிக்கொண்டார்கள்.

சக இயக்குனர்கள், விமர்சகர்கள் என்னை அங்கீகரித்ததும் தயாரிப்பாளர்கள்,  வினியோ கஸ்தர்கள் என்னைத் தள்ளி வைத்ததும் எதிரெதிர் துருவங்க ளிலிருந்தது. நான் அந்த இமேஜை உடைக்க வேண் டுமென மனப்பூர் வமாகவே விரும்பினேன். திட்டமிட்டேன். விழித்திருவை ஜனரஞ்சகமான ஒரு சினிமா வாக எடுக்க விரும்பியதற்கு  அதுவே முதற் காரணம்.

நான்கு விதமான கதைகளையும் என்னால் அணுக முடியும் என்பதைக் காட்டவே ஓர் இரவில் நான்கு வெவ்வேறு விதமான கதைகள் என முடிவு செய்தேன்.அதி புனைவான கதைப்பாத்திரங்களும் பரபரப்பான கதையின் மையமும் கவித்துவத்தையும் எளிமையையும் கோரி நிற்கவில்லை.

இன்றைய நவீன யுகத்தில் கதை சொல்லியின் ஆர்வத்தைக் காட்டிலும்  கதை கேட்பவனின் வேட்கை விசாலமடைந்து கொண்டேயிருக்கிறது. நேர்கோ ட்டின் மரபில் கதை சொல்லும் உத்தியிலிருந்து நவீன பார்வையாளன் மெல்ல மெல்ல  விலகிக் கொண்டு வருகிறான் என்பதே உண்மை. தேர்ந்த ரசனையை உருவாக்குவதில் கதையின் உள்ளடக்கத்தைப் போலவே கதை சொல்லுகிற உத்தியும் பெரும் பங்களிப்பு செய்வதாய் நம்புகிறேன். ஒரு கலைஞனாக அந்த நம்பிக்கையைப் பின் தொடர்ந்து செல்கிறேன். ட்ரெண்டின் மீதான ஈர்ப்பினால் அல்ல, 

கேள்வி : மேலே நான் சொன்ன மெக்சிக்கன் இயக்குனர்  இந்திய இயக்குனர்கள் பலரிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளார் . மணிரத்தினம் கூட விதி விலக்கல்ல . அவருடைய ‘ஆயுத பூஜை ‘ படம் அதற்கு உதாரணம் . அதாவது ஒரே படத்தில் வெவ்வேறு தடங்கள் பயணிக்கும் முறை. இந்த வெவ்வேறு தடங்கள் எல்லாம் இறுதியில் ஒரு புள்ளியில் வந்து குவியும் . என் அபிப்பிராயம் சரியா ?

 ரஷோமான் போன்ற படங்களில் அகிரா குரசேவா  நவீன கதை சொல்லல் முறையை நீண்ட காலத்திற்கு முன்னரே முயற்சி செய்து வெற்றியும் அடைந்திருக்கிறார்.மலையாளத்தில் எழுபதுகளில் வந்த கே.ஜி .ஜார்ஜின் ‘ஆதாமிண்ட வாரியெல்லு’ படமும் இப்படியான முயற்சி தான். ஆனால் கெய்ரிச், ராபர்ட்டினரோ, குவெண்டின் டொரண்டினா, அலசாண்ட்ரோ கொன் ஸ்லஸ் இனாரித் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தங்களின் வீரியமான, அழுத்தமான  நவீன கதை சொல்லல் முயற்சியால் உலகெங்கிலும் உள்ள  பல இளம் தலை முறை இயக்குனர்களிடம் பெரும் தாக்கத்தைச் செலுத்து கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அதில் நானுமொருவன். ஆனால் உண்மையில் ட்ரெண்ட்டை உருவாக்குவது நான் ஏற்கனவே சொன்னது போல கதை கேட்பதில் விசாலமடைந்து கொண்டிருக்கும் பார்வையாளனின் வேட்கையே தான்.

கேள்வி: மதிப்பு மிகுந்த இலக்கியப் பின்புலம் ஒன்று உங்களுக்கு உண்டு . அவற்றைத் திரைப்படங்களாக மடைமாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் எவை ?

நான் எழுதிய முதல் சிறுகதை ‘வதை’ , அது ஒரு தமிழ் இஸ்லாமிய நாவிதரைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. கணையாழியில் எழுதிய இரண்டாவது சிறுகதை ஒரு தமிழ் சிறுவனின் வாழ்வில் இரண்டாம் தாயாக கடந்து வருகிற ஒரு தமிழ்ப் பெண்ணைப் பற்றியது. மூன்றாவதாக எழுதி கல்கி இதழில் பிரசுரமான ’மழை வாசம்’’ சிறுகதை ஒரு நடுத்தர தமிழ் இளைஞனின் பழைய காதலைப்பேசுகிறது. 

இலக்கியம், திரைப்படம் ஆகிய இரண்டும் இரண்டு தனித்துவமான குணங்க ளோடு இயங்குபவை. புத்தகம் ஒரு பார்வையாளனுக்குத் தருகிற சுதந்திரத்தை, கற்பனானுபவங்களை ஒரு திரைப்படத்தால் முழுமையாகத் தர முடியாது. எல்லாக் கதவுகளையும் அடைத்து  ஒரு இருட்டுக்கொட்டடியில் போட்டு கையில் குச்சி வைத்து மிரட்டி நான் சொல்வதை மட்டுமே நீ கேட்டாக வேண்டும் என்கிற அளவில் தான் ஒரு திரைப்படம் பார்வையாளனுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது.

ஒரு அழகான பெண் தெருவில் நடந்து செல்கிறாள் என்று வாசித்தால் அந்த வரி தருகிற அனுபவமும் கற்பனையும் பெரிது. வாசிப்பவன் தனக்குப் பிடித்த மான பெண்ணை நினைத்துக்கொள்கிறான். தனக்கு பிடித்தமான தெருவை நினைத்துக் கொள்கிறான்.தனக்குப் பிடித்தமான நிறத்தில் அவளுக்கான ஆடையை அணிவிக்கிறான். தெருவில் நிறைந்திருக்கும் ஒளியும் அவள் நடக்கையில் பின்னணியாக ஒலிக்கும் இசையும் வாசிப்பவனின் விருப்பத்திற்கேற்ப அவன் மனதிலிருந்து வருபவை.

ஆனால், சினிமாவில் காண்பவை ஏற்கனவே இன்னொரு மனித மனதால் முடிவு செய்யப் பட்டவை. இந்த இரண்டு மனங்களும் இணைகிற புள்ளியில்தான் ஒரு மேஜிக் நிகழ்கிறது. அந்தப் பெண்ணின் அழகைப் பற்றி பல பக்கங்களில் விவரிக்கலாம், ஆனால்  சினிமாவில் அதை ஒரு குளோசப் ஷாட்டில் காட்டி விட முடியும், அதற்கு மேல் அங்கு விவரணைகளுக்கு அனுமதியில்லை. அது தேவையற்றதாகி விடுகிறது.

இலக்கியப் பிரதி அதிகமாக விவரணைகளால் ஆனதென்றால் சினிமா அதிகமும் சம்பவங்களாலும் காட்சித் துணுக்குகளாலும் ஆனது .சம்பவங்கள் அதிகம் இல்லாத நாவல் என்னதான் ஆகச் சிறந்ததென்றாலும் சினிமாவாக்க முடியாது , அல்லது அந்த நாவலைத் தழுவி திரைக்கதையாசிரியன் புதிய திரைக்கதையை எழுத வேண்டும். முழுக்க முழுக்க நடிகர்கள் மயமாகி விட்ட தமிழ்  சினிமாவில் அவதார புருஷர்களாக அல்லாமல் பலஹீனத்தோடு நிறைந்த சராசரியான, இயல்பான மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுகிற நாவல்களை படமாக்குவது என்பதும் குதிரைக் கொம்பான விசயம் தான்.

கேள்வி: தமிழில் அண்மையில் தோன்றி குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தந்த இளம் இயக்குனர்கள் பலரும் ஏன் மறுபடியும்  நட்சத்திர ஆதிக்கங் களுக்குத் தம்மைக் காவு கொடுக்கின்றனர் ?

நடிகர்கள் மயமாகி விட்டிருக்கும் சினிமாதான் அதற்குக் காரணம். ஒரு படத்தில் பெரிய நடிகரொருவர் இருக்கிறாரென்றால் அந்தப் படத்திற்கு சுலபமாக கடனுதவி கிடைக்கும். அறியப்படுகிற சக நடிகர்கள் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆர்வமாக பங்கு பெறுவார்கள். திரையரங்குகளும் காட்சி நேரங்களும் அதிகமாகக் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலே ரசிகர்களாகிய பார்வையாளர்கள் முதல் மூன்று நாட்களிலேயே பார்த்தும் விடுவார்கள். ஆனால் புதுமுக நடிகர்களின் விசயத்தில் இதெல்லாம் தலை கீழாக இருக்கிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருந்தால் மட்டுமே இன்றைய சூழலில் புதுமுகங்கள் நிறைந்த படத்தை திரையரங்கிற்கே கொண்டு வர முடிகிறது. எல்லா காலத்திலும் ரசிகர்கள் எனப்படுபவர்கள்  பல பிரிவுகளாகத்தான் பிரிந்து கிடக்கிறார்கள். சகல கலா வல்லவனையும் முரட்டுக் காளையையும் வெற்றிப் படமாக்கியது இன்றைக்கிருக்கிற மாதிரியான அதே ‘ஒப்பணிங் ஆடியன்ஸ் ‘ அல்லது ரசிகர்கள் தான். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு  நல்ல படத்தை பத்திரிகைகளும் பார்வையாளர்களும் பாராட்டுவதறிந்து  தேர்ந்த ஆடியன்ஸான ஒரு கூட்டம் திரையரங்கிற்கு வந்தார்கள். அது வரை படத்தை தியேட்டரில் நிறுத்தியிருந்தார்கள்.

ஆனால், இப்போது சினிமாவின் ஆயுள்  முதல் மூன்று நாட்களாகச் சுருங்கி விட்டது. நான்காவது நாள் படம் செத்து விடுகிறது. அடுத்த வெள்ளிக்கிழமை மேலும் ஐந்து அல்லது ஆறு புதிய படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. படங்களின் உருவாக்கத்தையும் வெளியீட்டையும் முறைப்படுத்தாமல் போனதே சிறிய படங்களின் மீது பார்வையாளனுக்கு தனிக் கவனம் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம். ஒரு நடிகரின் படத்தை முதல் மூன்று நாட்களில் பார்த்து விடுகிற ரசிகர்கள் (அது மிக மோசமான மொக்கையாக இருந்தாலும்)மற்ற சிறிய படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் நல்ல படங்களாக இருந்தாலும் வசூலில் பின் தங்கிவிடுகிறது.

அந்தப் படம் வெளியாவதே தெரியாமல் போய் விடுகிறது, வசூலை மட்டுமே மையமாக வைத்து ஆடும் ஆட்டத்தில் நல்ல இயக்குனர்கள் களத்திலிருந்து வெளியேற்றப் படுகிறார்கள். ஆகவே தங்களின் இரண்டாவது படத்திற்குப் பிரபல நடிகர்களைத் தேடிச் செல்கிறார்கள். சினிமாவின் தற்போதைய இந்த அவல நிலையைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்ந்து நோக்குவது அவசிய மாகிறது. 

 உங்கள் அடுத்த திரைப்பட முயற்சியில் இறங்கி விட்டீர்களா ?

ஆமாம். சிறிய பட்ஜெட்டில் ஒரு படமும் பிரபல நடிகருடன் ஒரு படமும் என பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.